மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ‘மதமாற்றம் காரணமல்ல' – சிபிஐ அறிக்கை!

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ‘மதமாற்றம் காரணமல்ல' – சிபிஐ அறிக்கை!
Published on

தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா மரணத்துக்கு மதமாற்றம் காரணம் அல்ல என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022ஆம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி போன்றவை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் பாஜக குற்றஞ்சாட்டியது. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது.

இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்திரவிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த அடிப்படையில் சிபிஐயும் தற்போது அறிக்கையை சமர்பித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில்....

2022 ஜனவரி 15ஆம் தேதி லாவண்யா ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது லாவண்யாவின் நிலை மிக மிக மோசமாக இருந்ததாக தெரிவித்ததோடு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லும்படி அவருடைய பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு லாவண்யா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த போது லாவண்யா நினைவுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், லாவண்யாவின் நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அவர் விஷமருந்தி இருக்க கூடும் என்பதை கண்டறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியாக லாவண்யா என்ன விஷத்தை அறிந்தினார் என்பதை மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக பூச்சி மருந்து அதுவும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதியே அந்த விஷ மருந்தை அருந்தியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து லாவண்யாவின் தந்தை முருகானந்தம் அவருடைய உறவினர்களுக்கு அலைபேசியில் அழைத்து லாவண்யா விஷம் அருந்திய விவகாரத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதும் மதமாற்றம் காரணமாக விஷம் அருந்தினார் என்பது தொடர்பாக எந்த ஒரு விவகாரத்தையும் முருகானந்தம் தெரிவிக்கவில்லை.

லாவண்யா பேசும் வீடியோவில் அவர் நினைவுடன் இருந்ததும் அதில் விடுதி காப்பாளரான சகாயம் ஏரி தன்னையும் தன்னைப் போல பிற மாணவிகளையும் விடுதி தொடர்பான வேலைகளை கொடுத்து அதிக அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார். இவ்வாறு தொடர் வேலைப்பளு காரணமாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்பதையும் அந்த வீடியோ பதிவில் லாவண்யா கூறியிருந்தார். மேலும் ஒன்றரை கிளாஸ் அளவுக்கு பூச்சி மருந்தை 9-1-2022 அன்று அருந்தியதை அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்

இறுதியாக மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்த போதும் விடுதி காப்பாளரான சகாய மேரி விடுதி தொடர்பான பல பணிகளை தொடர்ந்து லாவண்யாவுக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார்.

தன்னை படிக்க விடாமல் சகாயம் மேரி தடுத்து துன்புறுத்தி இருக்கிறார். தான் பூச்சி மருந்தை குடித்ததற்கு காரணமும் அவர்தான் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மரண வாக்கு மூலத்தில் லாவண்யா கூறி இருக்கிறார்

குறிப்பாக மைக்கேல் பட்டி பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் படித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பது தெரியவந்தது.

விரிவாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட லாவண்யா உட்பட வேறு எவரையும் அத்தகைய மதமாற்றத்திற்கு உட்படுத்தவும் இல்லை முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை என்பது விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது

மேலும், மாணவி லாவண்யா இறந்த பின்பாக அவருடைய தந்தை மற்றும் சித்தி ஆகியோர் விஷ்வ இந்து பரிஷத் தலைவரான முத்துவேல் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சில பா.ஜ.க தலைவர்களின் நிர்பந்தத்தால் இறந்த லாவண்யாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இறந்து போன லாவன்யாவின் உடலை பெறக் கூடாது என்பதற்காக அவருடைய தந்தை மற்றும் அவருடைய சித்தி ஆகியோர் பல இடங்களில் ஒளிந்து இருந்தார்கள்.

முன்னதாக மதமாற்ற அழுத்தம் என குற்றம் சாட்டி முத்துவேல் என்பவர் பதிவு செய்த லாவண்யாவின் வீடியோக்கள் அவருடைய அடையாளங்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன, இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முத்துவேல் மீது காவல்துறை சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

லாவண்யா உயிரிழந்தது என்பது மன அழுத்தத்தின் காரணமாக தான். ஏனெனில் விடுதி காப்பாளர் ஆன சகாய மேரி விடுதி கணக்கு வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் லாவண்யாவை ஈடுபடுத்தியதாலும் விடுமுறைக்கு கூட அவரை வீட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்ததாலும் ஏற்பட்ட மன அழுத்தம் தான் லாவண்யாவின் மரணத்திற்கு காரணம்.

சகாய மேரியை பொறுத்தவரை லாவண்யாவுக்கு அதிக அளவிலான வேலைப்பளுவை கொடுப்பதை அறிந்திருந்தும், அவர் அதனை குறைத்துக் கொள்ளவில்லை. இதனால் லாவண்யாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி பாடங்களை படிக்க முடியாமல் திணறவும் செய்திருக்கிறார். இறுதியாக கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக லாவண்யா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார்.

லாவண்யா தன்னை படிப்பதற்கு அனுமதிக்குமாறு விடுதி காப்பாளர் சகோதரி சகாய மேரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதற்கு விடுதி காப்பாளர் இசையவில்லை என்பது விசாரணையில் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய செயல்களை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட சகாய மேரி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. சகாய மேரியின் இந்த செயல் ஐபிசி 305 மற்றும் சிறார் நீதி சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாகும். எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடும்ப அழுத்தம் காரணம் குறித்த ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சிபிஐ கூறியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com