உதயநிதி... இன்னும் பழுக்கணுமாம்- கருணாநிதி பாணியில் ஸ்டாலின் பதில்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தன் தொகுதியான கொளத்தூர் நிகழ்வுகளில் ஆய்வுகளில் பங்கேற்பதில் தீவிரமாக இருந்துவருபவர். அதைப்போல இன்றும் சென்னை, கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கான தன் பணியாக அவர் தொகுதிவலம் வந்தார். பல இடங்களில் பணிகளை ஆய்வுசெய்தார்.
வழக்கம்போல இரண்டு அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர், நீர்வளத் துறைச் செயலாளர் என பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் புடைசூழ அவருடன் வந்தனர்.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு வண்டியில் ஏறப்போன அவரிடம் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு அவர் பதில் அளித்தார்.
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டதற்கு, உடனே, அவர்,” யார் சொல்றாங்க... எங்கேனு காட்டச் சொல்லுங்க...” என எதிர்க்கேள்வி கேட்க, செய்தியாளரோ எதிர்க்கட்சிகள் எனச் சொல்ல, ”மழை வர்றதுக்கு முன்னாடியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்.” என்றார்.
நேற்று மட்டுமே 15 செமீ மழை பெய்திருக்கிறது; அரசு என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்விப் பதிலளித்த முதலமைச்சர், “ எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதைச் சமாளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.” என்று கூறினார்.
அதையடுத்து, உதயநிதியைத் துணைமுதலமைச்சராக ஆக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றனவே என ஒருவர் கேட்க, “வலுத்திருக்கே தவிர பழுத்திருக்கலையே..” என முடிக்காமல் முடித்தபடி கிளம்பினார், முதலமைச்சர் ஸ்டாலின்.