
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை எனவும் சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை கொட்டுவது, ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் ஏற்கெனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.