“வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது!” – நவீன் பட்நாயக்
“வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது” என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், தனது உடல்நிலைக் குறித்தும் வி.கே. பாண்டியன் பற்றியும் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்:
"எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி இருக்கிறார். பிரதமர் மோடிக்கு எனது உடல்நிலையில் இவ்வளவு அக்கறை இருந்தால், நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இது குறித்து பொதுக் கூட்டத்தில் சத்தமாகச் சொல்வதை விட, தொலைபேசியை எடுத்து என்னிடம் விசாரித்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பதற்காகத்தான் அவர் முயற்சி செய்கிறார். எனது உடல்நிலை குறித்து டெல்லியில் உள்ள சிலர், கடந்த 10 ஆண்டுகளாக வதந்தி பரப்புகிறார்கள்.
முதலமைச்சர் என்ற வகையில் நான் எடுக்க வேண்டிய முடிவுகளை என் சார்பாக வி.கே.பாண்டியன் எடுக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அபத்தமானது. இது குறித்து நான் ஏற்கெனவே அடிக்கடி கூறியுள்ளேன். இது பழைய குற்றச்சாட்டு. இதற்கு எந்த வலுவும் இல்லை. அவர் என்னுடைய அரசியல் வாரிசு கிடையாது.
பிஜு ஜனதா தளத்தின் மற்ற தலைவர்களை விட வி.கே.பாண்டியனை முன்னிறுத்துவதாகச் சொல்வது முட்டாள்தனமானது. பிஜு ஜனதா தளத்தின் எதிர்காலத் தலைவரை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள். எங்கள் கட்சியில் உள்ள சிறந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அமைச்சர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மூலம் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அதிகாரத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரியாக இருந்த வி.கே.பாண்டியன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்த பிறகே, அரசியலுக்கு வந்தார்.” என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.