பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பித்துள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் டிச. 4 வரை தொடரும். அனைவரும் கண்டிப்பாகப் படிவத்தை நிரப்பித் தர வேண்டும். முடிந்தவரை தகவல்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்குப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 50% படிவங்கள் நிரப்பிய நிலையில் திருப்பி பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த பணிகளில் 83,256 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 68,000 பேர் பிஎல்ஓக்கள். மேலும் 33,000 தன்னார்வலர்கள், 2,45,340 கட்சி முகவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எஸ்ஐஆர் பணிகளில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வரைவு பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய அவகாசம் சேர்க்கப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு விடுபட்டவர்கள் கண்டிப்பாகச் சேர்க்கப்படுவார்கள். இணையத்தில் படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்பட்டது. யாருடைய பெயரையும் காரணமின்றி நீக்க முடியாது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் கண்டிப்பாகக் காரணம் தெரிவிக்கப்படும். எஸ்ஐஆர் பணிகளுக்குக் கூடுதல் கால அவகாசம் வாய்ப்பில்லை." என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தவர், ”எஸ்.ஐ.ஆர். படிவங்களைக் கொடுத்தாலே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பே இல்லை.
ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாகக் குற்றச்சாட்டு வைப்பது தவறானது.
தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் இங்கு வாக்களிக்க சுமார் 869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.”என்றார்.