‘மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார்!’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் அரசியல் பயணம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Published on

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானது, அக்கட்சிக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

1948 இல் பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியாரின் பேரன், ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தார். 1975 இல் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், அதில் ஒருவர் (திருமகன் ஈவெரா) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.

மாணவர் காங்கிரஸ் மூலம் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன், 1984இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் சிவாஜி கணேசனின் பற்றாளரான இவர், 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்ஜிஆரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜானகி முதலமைச்சரானார். அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுத்தது. இதனால், சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர்.

பிறகு காங்கிரஸிலிருந்து விலகி, தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி, அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அந்தத் தேர்தலில் இளங்கோவனுக்கு நான்காம் இடமே கிடைத்தது. சிவாஜி கணேசன் தனது கட்சியை ஜனதா தளம் கட்சியோடு இணைத்த நிலையில், அவர் காங்கிர்ஸ் கட்சியில் இணைந்தார்.

அதன்பிறகு பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைப் பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெராவின் அகால மரணத்தால் அவரது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியிக் போட்டியிட்டுத் தேர்வானார்.

2004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், முதல் முறையாக மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இரண்டு முறையும் செயல் தலைவராக ஒருமுறையும் பதவி வகித்துள்ளார் ஈவிகேஸ் இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈவிகே எஸ் இளங்கோவன் பொறுப்பேற்ற 1996 காலகட்டம் அக்கட்சி, தமாகா பிளவால் மிக பலவீனமாக இருந்த காலம். அப்போது ஒற்றை ஆளாக தன் துணிச்சலான பேச்சு ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கட்சியை நடத்திக் காட்டினார். குறிப்பாக அதிமுக தலைவர் ஜெயலலிதாவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைப்பார். அது பல ஆண்டுகள் தொடர்ந்தது. அவர் விமர்சனத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியும் தப்பியது இல்லை. சில சமயம் இந்த விமர்சனங்கள் அத்துமீறிப் போனதும் உண்டு. மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

ஆனாலும் சிக்கலான காலகட்டத்தில் தமிழக காங்கிரஸை உயிர்ப்புடன் வைத்திருந்தவர் என அவர் நினைவு கூரப்படுவார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com