சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

கொடநாடு வழக்கில் இன்டர்போல்- எடப்பாடிக்கு சிக்கலா?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாகவும் இதனால் சர்வதேச போலீசான இண்டர்போல் மூலம் விசாரிக்க இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

சட்டப்பேரவையில் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு உட்பட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அவர் இன்று பேசினார். அப்போது இதைக் கூறினார்.

மேலும், “ நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது.” என்றும் ஸ்டாலின் அ.தி.மு.க.வினரைச் சாடினார். 

கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாகவும், அது தொடர்பாக ஒரே நாளில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என ஒரு பட்டியலையும் அவர் வாசித்தார்.

அதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம் என்றார் ஸ்டாலின். 

”எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? "சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே" என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை எஸ்.பி.-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசியபோது, இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்.” என்றவர், 

”கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.” என்றும் கூறினார். 

ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தவேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும் தி.மு.க. தரப்பினரும் வலியுறுத்தியநிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கு பற்றி முன்னரே சட்டப்பேரவையில் பேசியிருந்தார். மீண்டும் அவர் பேரவையில் குறிப்பிட்டுப் பேசியிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்துமா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com