
மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் பதிவில் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரிரு வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஒரு சிலர் கடந்த சில மாதங்களாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியா டுடே கருத்தரங்கில் பேசியபோது, “ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். கூட்டணியை முறிக்கும் வகையில் சிலர் முயற்சிக்கின்றனர்” என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவுகளில், கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார். பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், “எங்கள் பலம் இல்லாமல் திமுக அரியணை ஏற முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்; நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான். இல்லையென்றால் திருப்பி அடிப்போம்” என்று தெரிவித்தார்.இது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் இரண்டு மூன்று நாட்களாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கார்கேவிடம் அறிக்கையாகக் கொடுத்துள்ளேன். இனி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். மேலும் தலைமை என்ன சொல்கிறதோ அதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் பின்பற்றும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று காலை மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் பதிவில் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.