சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
Published on

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி இன்று (அக்.23) காலை உயிரிழந்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதயில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.

இந்நிலையில், கு.பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும், என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.

அவரது மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com