
SIR குறித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் கருத்துக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு திமுக கூட்டணி கட்சிகளும் தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது.” என அவர் கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“SIR என்பதே சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் வாக்காளர்களை மிரட்டும் இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.” என்று கூறியுள்ளவர் மற்றொரு பதிவில், “வாக்குரிமையைப் பறிக்கும் SIRக்கு எதிராக தமிழக மக்களை திரட்டி போராட வேண்டும்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் மறு சீரமைப்பு என்பது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பது அனைவருக்குமே தெரியும்.
“ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைகளுக்கு எதிரான, மக்கள் உரிமைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழ்நாடு வலுமிக்க எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வந்திருக்கிறது. இந்த விவகாரத்திலும் மக்களின் உரிமைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட இருக்கிறது, வாக்குரிமை எப்படிப் பறிக்கப்பட இருக்கிறது என்பதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக மிக அவசியமானதாகும்.
தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல், இந்த விவகாரத்தில் போராட்ட நடவடிக்கையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருமித்த முடிவெடுத்து, மக்களைத் திரட்டிப் போராடினால் மட்டுமே, இந்த ஆபத்தான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.