
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக இதுவரை 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பீகாரை தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தற்போது தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவ.4இல் தொடங்கியுள்ள இந்த பணிகள் டிச.4ஆம் தேதி முடிகிறது.
இந்நிலையில் எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எத்தனை விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,90,13,184 படிவங்கள் இதுவரை ( நவம்பர் 15 மாலை 3 மணி வரை ) விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .