
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடர்பான பணிகளை நாளைமுதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உரிய திட்டமிடல், முறையான பயிற்சி, நிதி ஒதுக்கீடு செய்யாமல் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நிர்பந்திப்பதால் பணிச் சுமை ஏற்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும், கூடுதல் பணிகளை கருத்தில் கொண்டு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதனால், வாக்காளர்களுக்கு கொடுத்த விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்று, பதிவேற்றம் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.