தமிழ்நாடு வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்ககோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை தி.மு.க., எம்.பி. டி.ஆர். பாலு இன்று தாக்கல் செய்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது.
அதிகனமழை மற்றும் காற்றின் காரணமாக சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தேவையான நிதி வழங்கவும், பாதிப்புகளைப் பார்வையிடவும் மத்தியக் குழுவை அனுப்பிவைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பு வேண்டும் என்றும், புயல் பாதிப்புகள் குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க அனுமதி கோரியும் மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.