அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை!
Published on

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், அமைப்புகள் சம்பந்தப்படட கொடிகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இயற்கை நியதிக்கு புறம்பானது என்றும் கட்சி கொடிக்கம்பங்கள் குறித்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தன. அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், விஜயகுமார். எஸ். சவுந்தர் உள்ளிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து அரசியல் கட்சிகள் தனி நீதிபதி உத்தரவால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கருதினால் நீதிமன்றத்தை அணுகி இடையூட்டு மனுவை தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டனர். இதற்கிடையில், கொடிக்கம்பங்கள் அகற்றுவது சம்பந்தமாக அம்மாசி தேவர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை காரணம் காட்டி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சிபிஐ (எம்) தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் தோழர் பெ சண்முகம் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (எஸ்.எல்.பி) தாக்கல் செய்தார். இன்று (25.8.2025) உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என்றும் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com