
தந்தி தொலைக்காட்சியின் இளம் செய்திவாசிப்பாளர் பிரியவதனா நேற்று அகால மரணம் அடைந்தார்.
சென்னை, சைதாபேட்டையில் தன் பெற்றோருடன் வசித்துவந்த அவர், அன்றாடம் அலுவலகத்துக்குச் சென்றுவந்தார். வழக்கம்போல நேற்றும் காலைப் பணிக்காகச் சென்றவர், இயல்பாக தன் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
மதியம் வீட்டுக்கு வந்தவர், உணவுக்குப் பிறகு தூங்கச் சென்றுவிட்டார். மாலை நெடுநேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காதநிலையில், அதிர்ச்சியான பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்தனர் என்றும் அப்போது பிரியவதனா தூக்கிலிட்டபடி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
அந்த அறிக்கை வந்தபின்னரே சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும்.
அவரது மரணம் குறித்து அறிந்த சக ஊடகத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இயல்பாகவே எதையும் துணிவாக எதிர்கொள்ளும் பிரியவதனா இப்படியொரு முடிவை எப்படி எடுத்தார் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை.