பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை
பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை

பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை! கடுமையாகச் சாடிய சின்மயி!

சமீபத்தில் சென்னையில் பால்கனியில் தவறி விழுந்த ஒரு குழந்தை மீட்கப்பட்ட காணொலி வைரலானது நினைவிருக்கலாம். அந்தக் குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசும், கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ரம்யாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாதப் பெண் குழந்தையும் உள்ளனர்.

அண்மையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து பெண் குழந்தை தவறி பால்கனியில் விழுந்தது. குழந்தை அங்கிருந்து கீழே விழுவதைப் போல இருந்தபோது, அக்கம் பக்கத்தினர் பார்த்து கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் லாவகமாகக் குழந்தையை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான காணொலி, அப்போது சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, சமூக ஊடகப் பயனாளிகள் குழந்தையின் பெற்றோரைக் கடுமையாகச் சாடி, திட்டித் தீர்த்தனர்.

அதையடுத்து, சென்னையில் இருந்த ரம்யா தன் கணவர், 2 குழந்தைகளுடன் கோவை காரமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாடகி சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில், சில கருத்துகளைக் குறிப்பிட்டதுடன், ...”(இவர்களுக்கு) ஒரு பெண் ட்ரோல் செய்யப்பட்டு இறந்துபோவது தவறில்லை. என்ன ஒரு சமுதாயம்.. என்ன ஒரு கலாச்சாரம்..“ என்றும் சாடியுள்ளார்.

மேலும், யூ டியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பகிர்ந்த இந்தக் குழந்தை காணொலி ட்வீட்டைக் கோத்துவிட்டு, 'இவரைப் போன்ற நபர்கள் ட்வீட் மூலம் குழந்தையின் பெற்றோரை அவமானப்படுத்தினார்கள். இப்போது குழந்தையின் தாய் தன்னை மாய்த்துக்கொண்டதால், இந்த மனித ஜென்மங்கள் இதைக் கொண்டாடவும் கூடும்.” என்று சின்மயி மிகக் கடுமையாகவும் இன்னொரு ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com