கொளத்தூரில் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம் என்று நான் முன்னரே கூறினேன் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். முறைகேட்டை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை, எழும்பூரில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், த.வெ.க. சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் உட்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
" எஸ்.ஐ.ஆர். மூலமாக கொளத்தூர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொகுதியில் இருபது ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே இறந்துள்ள நிலையில், ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது திட்டமிட்டு செய்த செயலாகத் தெரிகிறது.
இதுகுறித்து, எனக்கு தேர்தலுக்கு முன்னரே செய்தி வந்தவுடன், தி.மு.க.வின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவிடமும், அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமும் கூறினேன்.
இது திட்டமிட்டு செய்யப்படுவதுபோல் தோன்றுவதால், அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேறு தொகுதியில் நிற்கலாமே என்றும் எச்சரிக்கை விடுத்தேன். ஆனால், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று கூறினர்.
மு.க. ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோர் தோற்கடிக்கப்பட்டது, திட்டமிட்ட சதியே ஆகும்." என்று திருமாவளவன் கூறினார்.