
விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தை முடக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் த.வெ.க. புகார் கூறியுள்ளது.
அக்கட்சியின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட புகார் விவரம்:
”பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது.
சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.