பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர் கூடாது!

Pallikarani marshland
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
Published on

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர் ஏற்படுத்துவதால், வெள்ளம் உருவாகும் ஆபத்து இருப்பதால், அந்தப் பணியை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல்  மீட்சி, பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர், நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதியத் திட்டத்தை கடந்த 2024ஆம் ஆண்டில் தி.மு.க. அரசு தொடங்கியது. பள்ளிக்கரணை உட்பட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு, மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக தி.மு.க. அரசு அறிவித்தது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான்.

ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு  ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு  நடைபாதையும் அமைத்து வருகிறது.

தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.

பள்ளிக்கரணையின் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர், நடைபாதை அமைப்பது 2017ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு - மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும்.

அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உட்பட்டவை அழிவைச் சந்திக்கும்.

சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தான்.

அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு  நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும்." என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com