
ஆளுநரின் “மைக் ஆஃப் செய்யப்பட்டது” என்ற கூற்று சுத்தமான புளுகு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை வாசிப்பதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் “மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது” என்று குறிப்பிட்டது உண்மையல்ல என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜனவரி 20) அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாக நம்முடைய சட்டமன்றத்திற்கு வந்து சென்றுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, நிகழ்ச்சி முடிந்தவுடன் இறுதியில் தேசிய கீதம் இசைப்பது – இதுதான் தமிழ்நாட்டின் மரபு என்று நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்துச் சொல்லி வந்தாலும், அவர் இன்று பேசத் தொடங்கும் போதே ‘தேசிய கீதம் பாடவில்லை’ என்று சொன்னார். ஆனால் சபாநாயகர் அது மரபல்ல. இன்று ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும். அந்த உரையை நிகழ்த்துங்கள் என்று சொன்னபோது, திரும்பத் திரும்ப சபாநாயகர் சொன்ன போதும் தமிழக அரசால் கொடுக்கப்பட்ட அந்த ஆளுநர் உரையை வாசிக்காமல், தானாக ஏதாவது வார்த்தைகளை எல்லாம் சொல்லி, அதன் மூலம் சட்டமன்றத்தில் பிரச்சினைகளை கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் மட்டும் அவரிடத்தில் தொடர்ந்து, ‘சட்டமன்றத்தில் ஆளுநர் அறிக்கையை தயவுசெய்து படியுங்கள்’ என்று எவ்வளவு தூரம் எளிமையாகத் தாழ்ந்து போய்க் கேட்க முடியுமோ அந்த அளவிற்கு சபாநாயகர் என்று கேட்டார். சட்டமன்றத்தின் தலைவர் சபாநாயகர் தான். ஆனால் சபாநாயகர் அப்படித் தாழ்மையாகக் கேட்டும், அதை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறிவிட்டார்.
வெளியேறிச் சென்ற பிறகு, தன்னுடைய ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு ஒரு அறிக்கையைத் தந்துள்ளார். அவருடைய மைக் ஏதோ அனைத்தும் வைக்கப்பட்டு இருப்பதைப் போல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் பேசுகிறபோது சட்டப்பேரவைத் தலைவர் எழுந்து, ‘நீங்கள் எழுதிக் கொடுத்ததை வாசியுங்கள்’ என்று அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்கும் உரிமை சட்டப்பேரவைத் தலைவருக்கு உண்டு. ஆனால் ஆளுநர் உரையை வாசிப்பதைத் தவிர்த்து விட்டுச் சென்று, இப்போது ‘மைக் ஆஃப் செய்யப்பட்டது’ என்று சொல்கிறார்.
ஆனால் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. அது சுத்தமான புளுகு என்பதைத் தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். ஆளுநர் தான் மைக் ஆப் செய்யப்பட்டு விட்டது என சொல்லிவிட்டால் அதை உண்மை என்று மக்கள் எண்ணுவார்கள் என்று நினைக்கின்றார். அப்படி ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. ஆஃப் செய்யப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது. அவரை நாங்கள் பேசத்தான் விட்டிருக்கிறோமே தவிர, மைக்கை ஆஃப் செய்ய நாங்கள் அழைக்கவில்லை.”