உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஆளுநர் இரவிக்கு உச்சநீதிமன்றம் வைத்த கேள்விகள் என்னென்ன?

நீதிமன்ற விசாரணைக்குப் பின் மசோதாக்களைத் திருப்பி அனுப்பியது ஏன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர்.என். இரவிக்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த மனுவின் மீது கடந்த நவம்பர் 10ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அரசின் மனுவுக்கு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 18ஆம் தேதி நடத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அறிவிக்கப்பட்டபடி நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.

“எந்தக் காரணமும் இல்லாமல் மசோதாக்களை ஆளுநர் நிராகரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது.” என்று தமிழக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “உச்சநீதிமன்றம் நவம்பர் 10ஆம் தேதி ஆளுநர் தரப்புக்கு பதிலளிக்க உத்தரவிட்ட பிறகு, அவர் மசோதாக்களைத் திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன? 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மசோதாக்கள் மீது பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் அவகாசம் தேவை என்று ஆளுநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com