அ.தி.மு.க. எப்போதோ அழிந்துவிட்டது; இப்போது இருப்பது வெறும் உள்ளீடற்ற கூடுதான் என காங்கிரஸ் முக்கிய தலைவர் இராகுல் காந்தி கடுமையாகப் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முற்பகல் அவர் பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக, இதற்காக காலை 8.30 மணியளவில் புதுதில்லியிலிருந்து தனி விமானத்தில் அவர் புறப்பட்டார். சென்னைக்கு சுமார் 11 மணிக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரிக்குச் சென்றார்.
பிரதமர் மோடி, அமித்ஷா அ.தி.மு.க.வை தான் சொல்கிறபடி கேட்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டதாகவும் அது நீண்ட காலத்துக்கு முன்னரே அழிந்துவிட்டதாகவும் உண்மையில் தி.மு.க.வைப் போல அது தமிழகத்தைக் காத்த ஒரு கட்சியாக இருந்தது என்றும் அவர்களின் ஊழலால் மோடியும் அமித்ஷாவும் அ.தி.மு.க.வைக் கையில் எடுத்து, தமிழ் மரபு, வரலாற்றை அழிக்க அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இராகுல் குறிப்பிட்டார்.
இதேசமயம், பொன்னேரியில் அவர் மு.க.ஸ்டாலினின் பெயரையே குறிப்பிடாமல் பேசினார் என அ.தி.மு.க. தரப்பினர் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
அத்துடன், அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, ” இராகுல்காந்தி அவர்களே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக அறிவாலயத்தில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்பதை அறிவீர்களா?” என தன் எக்ஸ் பக்கத்தில் இராகுலைக் கோத்துவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.