
காங்கிரஸ் முக்கிய தலைவர் இராகுல்காந்தியும் முதலமைச்சர் ஸ்டாலினும் கூட்டாகப் பிரச்சாரன் செய்ய வாய்ப்பில்லை என்று தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இதைக் கூறினார்.
”பா.ஜ.க.வினர் ஒவ்வொரு வீடாகச் சென்று 10 ஆயிரம் ரூபாய் மாதிரி காசோலை தருவதற்காக வாக்காளர் அடையாள அட்டை எண் உட்பட்ட தகவல்களை சேகரித்து வருவதை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜோகோ (ZOHO) உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு 70 லட்சம் ரூபாய் ஒருவருக்குக் கொடுத்துள்ளார். அதை பா.ஜ.க.வினருக்கு விநியோகம் செய்துள்ளார். அதனைப் பிடித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வருமான வரி வரவு செலவைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அ.தி.மு.க.வினர் 10 ஆயிரம் கொடுப்பதற்கான துண்டு பிரசுரம் மாதிரி வழங்கி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் பி டீமாக இந்தியா முழுவதும் செயல்படுகிறது.
இராகுல் காந்தி தமிழகத்தில் திமுக கூட்டணி தோற்க வேண்டும் என நினைக்கிறார் அதனால் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வர மாட்டார் என அண்ணாமலை பேசியது குறித்து கேட்கிறீர்கள். இராகுல் காந்தி நாளை தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வருகிறாரே?
இராகுல் காந்தி ஒரு பக்கமும் முதல்வர் ஒரு பக்கமும் பிரச்சாரம் செய்கிறார்கள். இருவரும் ஒன்றாகப் பிரச்சாரம் செய்ய நேரம் இல்லை. ஏற்கெனவே பயணத் திட்டம் வகுத்துவிட்டதால் அதற்கான நேரம் இல்லை.
அவர்களுக்கு நாங்கள் ஓட்டு கேட்கிறோம்; எங்களுக்கு அவர்கள் வாக்கு கேட்கிறார்கள் எல்லாம் ஒன்றுதான்.
இராகுல் காந்தி தமிழகத்திற்கே வரமாட்டார் என அண்ணாமலை கூறினார். ஆனால் இப்போது தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
அண்ணாமலை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் அப்படித்தான் பேசுவார்.
தேர்தல் ஆணையம் எங்களின் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சட்டப்படி எதிர்வினை ஆற்றுவோம்.” என்று பாரதி கூறினார்.