அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அவரிடம் செங்கோட்டையன்,தினகரன் ஆகியோர் எழுப்பிய விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தும் மேலும் அவர் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது:
”அ.தி.மு.க.வைக் குறைகூற முடியாமல் பா.ஜ.க.வைப் பற்றி பேசுகிறது, தி.மு.க. தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். அமைச்சர் வெள்ளை பேப்பரைக் காட்டுகிறார். அவ்வளவுதான் இருக்கிறது.
முதலமைச்சர் சொன்னபடி செய்திருந்தால் 25 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்; அப்படி நடக்கவில்லை. நிதியை ஒதுக்காமல் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.
போதைப்பொருள் அதிகமானதால் குற்றங்கள், கொலைகள் நடக்கின்றன. நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்காமல் இருப்பது பிரச்னை. மத்திய பணியாளர் தேர்வாணைய விதிப்படி செய்யவில்லை.
செங்கோட்டையன் சொன்னபடி, என் மகனையோ மருமகனையோ எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என் மீது அரசியல்ரீதியாகப் பேசமுடியாமல் இதைப் பிடித்துக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். முதிர்ந்த அரசியல்வாதி இப்படி செய்யலாமா?
எஸ்.ஐ.ஆர். என்றாலே தி.மு.க. அலறுகிறது, பதறுகிறது. போலியாகச் சேர்க்கப்பட்டவர்களை நீக்கினால் இவர்களுக்கு என்ன?” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.