சட்டமன்றம்: ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் இடையே நடந்த காரசார வாதம் என்ன..?

முதல்வர் ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
முதல்வர் ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
Published on

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 19) காலை அவை தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 7.51% அதிகரித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய அரசின் தரவுகள் சொல்கிறது; மணிப்பூர் கணக்கையும் சேர்த்து கூறினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று நயினார் நாகேந்திரன் கூறினால், மணிப்பூரையும் அதில் சேர்த்து சொல்ல வேண்டும். இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அதிகமாக உள்ளது என்று ஒன்றிய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரங்களும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் அதிகமாக உள்ளன. இதனை ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு கோடைகால நிதியாக ரூபாய் 2,000 கொடுத்துள்ளீர்களே, 5 ஆண்டுகளில் 5 முறை கோடை காலம் வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே.. அது என்ன ஆனது? அதைச் சொல்லிவிட்டு இதையெல்லாம் கேளுங்கள்" எனக் கூறினார். ஸ்டாலினின் பதிலடியால் திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி ரசித்தனர்.

மேலும், "நானும் உங்கள் பேட்டியை பார்த்தேன். 'மோடி மஸ்தான்' போல் கொடுக்கப்பட்டதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அதை நான் பிரதமரை குறிப்பிட்டு கூறியதாகவே எடுத்துக் கொண்டேன்" என சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்தார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

நயினார் நாகேந்திரன் முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மோடி மஸ்தான் வேலை செய்து மக்களை ஏமாற்ற கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று காலை பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை கேட்டு எனக்கு தூக்கி வாரி போட்டது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 5,000 ரூபாய் பணம் தேர்தலுக்கான அச்சாரம் தான்." எனக் கூறி இருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com