தீபாவளியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சற்றுமுன்னர் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு இணங்க, தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வியாழன் அன்று தீபாவளி வருவதால் வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ஓரிரு நாள்களில் பயணம்செய்வது சிரமம் எனும் நிலையில், வெள்ளி விடுமுறை விட்டால் மாணவர்களுக்கு வார விடுமுறையுடன் சேர்ந்து தீபாவளி விடுமுறையைக் கொண்டாட முடியும்.
இதனால் தீபாவளிக்கு முன்னதாகவும் ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களுக்கு வசதியாக, நாளையும் அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.