யார் அந்த கோட்டை அதிகாரி... அஜித்குமார் கொலையில் நீடிக்கும் மர்மம்!

அஜித்குமார் சித்ரவதைக் கொலை
அஜித்குமார் சித்ரவதைக் கொலை
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இளைஞர் அஜித்குமார் போலீசால் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம், இன்றுவரை சூட்டைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இதில், படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த கேள்விக்கணைகளை உண்டாக்கியுள்ளன. 

தொடக்கம் முதலே இந்தப் பிரச்னையில் இரண்டு தகவல்கள் அந்தரத்தில் அலையும் மாயாவியைப் போல விடை கிடைக்காமல் இருந்துவந்தன.

முதலில், காணாமல்போனதாகக் கூறப்படும் நகைகளை அவர்கள் மதுரையில் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் அதைப் பற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அரசு உயர் அதிகாரிகளோ முதலமைச்சரோ இந்தப் புள்ளியைப் பற்றி சிறிதளவுகூடக் குறிப்பிடவில்லை. 

பொதுவாக இப்படியான சம்பவங்களில் நிகழ்வு வரிசையாக இவை குறிப்பிடப்படுவது வழக்கம். இந்த விவகாரத்தில் மட்டும் நகை மதுரையில் காணாமல்போனதா என்பதைப் பற்றிய கேள்வியோ பதிலோ இல்லை. 

மக்கள் சிவில் உரிமைக் கழகம்- பியுசிஎல் அமைப்பின் மதுரை மாவட்டக் குழு வெளியிட்ட அறிக்கையிலும் சில வழக்கறிஞர்கள் தனிப்பட்ட வகையிலும் இந்தப் பிரச்னையைக் கிளப்பினர். 

அதன்பிறகே புகார் அளித்த பெண்ணின் முகத்தை மூடிய பேட்டி ஊடகங்களில் வெளியானது. முதல் தகவல் அறிக்கையில் சொன்ன கதையை அவர் கொஞ்சம் மாற்றிச் சொன்னார். 

ஒருவேளை மதுரையில் அவர்கள் ஸ்கேன் எடுத்ததாகக் கூறப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமராவில் இது பதிவாகியிருந்தால் மட்டுமே, இதைப் பற்றிய உண்மை வெளிவரும் என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்கப் பேசும் வழக்கறிஞர்கள். 

அடுத்ததாக இன்றுவரை பதில் கிடைக்காத இன்னொரு கேள்வி, உயர்நீதிமன்றமே துவட்டித் தொங்கப்போடும் அளவுக்கு சட்ட நடைமுறைகளை மீறி காவல்துறையினர் இதில் செயல்பட்டது எப்படி என்பது!

தலைமைச்செயலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் வாய்மொழியாகச் சொன்னதன் பேரிலேயே மாவட்ட அதிகாரி உத்தரவிட்டு இப்படியொரு கொடூரக் காவல்துறைப் படுகொலை அரங்கேற்றப்பட்டது எனச் சொல்கிறார்கள். 

கொலைத்தாக்குதலில் ஈடுபட்ட காவலர் கும்பலில் ஒருவரின் மனைவி அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதுடன், மேலதிகாரிகள் சொன்னதாலேயே தங்கள் கணவன்மார் இப்படிச் செய்தனர் என்று எந்த உறுத்தலும் இல்லாமல் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். 

அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் யார் அந்த அதிகாரி என்பதற்கு அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

முதலில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டபோதும் மாநில அரசின் காவல்துறையே விசாரிக்கும் என்பதால், இதற்கு நியாயம் கிடைக்காது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேசிய மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறினர். 

ஆனால் திடீர் திருப்பமாக, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற காவல்துறை அமைச்சரான முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதால் நிலவரம் தலைகீழாக மாறியது. 

மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு இடையே இந்த விவகாரத்தில் எதிரெதிர் நிலை இருக்கும் நிலையில், சர்ச்சைக்கு உள்ளான நிகிதாவின் தொலைபேசி உரையாடல்களை எப்படியும் சிபிஐ அமைப்பு நோண்டி எடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி புலன்விசாரணை முடுக்கிவிடப்பட்டால், உண்மையில் கோட்டையிலிருந்து யாரும் பேசினார்களா, பேசியது யார், நிகிதாவுக்கும் அவர்களுக்கும் இடையிலான பிண்ணனி என்ன என பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com