‘மொழியை அழிப்பதே பாஜக அரசின் கொள்கை’ – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெரியார், அண்ணா, கலைஞர் வழியிலான திராவிட இயக்கம், ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து தமிழைப் பாதுகாக்கும் அரண். என்றும் தமிழைக் காத்து நிற்கும் திமுகவுடன் பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. கழகத்தை அரசியல் களத்தில் எப்போதும் எதிர்க்கும் கட்சிகளும்கூட இந்தித் திணிப்பு கூடாது என்கின்றன.

இந்தியை ஏற்றுக்கொண்ட பீகார் மக்களின் சொந்த மொழியான மைத்திலி, வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.யின் தாய் மொழி இந்தி என நினைப்போம். உண்மை அதுவல்ல. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் 'இந்தி' என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. ஆதிக்கத்தை உணராமல் போனவர்களின் தாய்மொழிகள் இந்தி மொழியால் கரைந்து காணாமல் போயின. இதனாலே இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்.

வடஇந்திய மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்துள்ளது. முகமூடிதான் இந்தி. ஆனால், அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம். வடமாநிலங்களை போல் தாய்மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.

மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையாக இருக்கிறது. தன்னிலிருந்து திராவிட குடும்பத்து மொழிகளை கிளைத்திட செய்த தாய்மொழி தமிழ். சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவானதுதான் இந்தி மொழி. தமிழ் எனும் கோட்டைக்குள் ஓட்டை போட்டு இந்தி, சமஸ்கிருதம் நுழைய முயற்சி. வள்ளலார் உள்ளிட்டோர் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து தாய்மொழியை ஆயுதமாக கொண்டனர். தமிழ் மொழியை இந்தியாலோ, சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com