சென்னை ஈ.சி.ஆர். சாலையில் நேற்றிரவு குடும்பத்துடன் காரில் பயணித்த இளம் பெண்களை, திமுக கொடி கட்டிய மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கானத்தூர் அருகே முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் சிலர் மற்றொரு காரில் துரத்தி அச்சமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், காரில் இருக்கும் பெண்கள் பதற்றத்துடன் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. காரில் வரும் பெண்களை, மற்றொரு காரில் துரத்திய இளைஞர்கள், சாலையின் குறுக்கே காரை நிறுத்தி தடுத்துள்ளனர். அந்த காரில் இருந்து இளைஞன் ஒருவன் வேகமாக ஓடி வந்து காரில் இருந்த பெண்களிடம் கதவை தட்டி, அத்துமீறுவதாக தெரிகிறது.
துரத்திய இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க காரை ரிவர்ஸ் எடுத்துச் சென்ற நிலையில், அந்தப் பெண்களை காரில் விடாமல் துரத்தி உள்ளனர். பெண்கள் பதற்றத்துடன் பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இளம்பெண்கள் செல்லும் காரை மறிக்கும் மற்றொரு காரில் திமுக கட்சிக் கொடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது பரவி வரும் சூழலில், இந்தச் சம்பவம் எப்போது நடந்தது? அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது? காரில் துரத்தியவர்கள் யார் என்பது குறித்தெல்லாம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.