திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பதற்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார்.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் திரிஷ்யம். இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் ரீமேக் ஆனது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் 2015இல் வெளியானது. இதில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் ஹிட் ஆனது.
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பதற்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார்.
சினி உலகம் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், "பாபநாசம் படத்திற்கு ரஜினிகாந்துதான் முதல் தேர்வாக இருந்தார். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்தாலும், தன்னை போலீஸ் தாக்குவது போன்ற காட்சியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதற்கிடையே கமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதை அறிந்த ரஜினிகாந்த், "சூப்பர்! வாழ்த்துகள்!" என பெரிய மனதுடன் அவருக்கே உரித்தான பாணியில் கூறி எங்களை வாழ்த்தினார்" என்று தெரிவித்துள்ளார்.