திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை தொடர்பாக அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம், இன்னோவா கார் உள்ளிட்டவை கணவர் வீட்டாருக்கு தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.