ஈரான் போர் - அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ராஜினாமா!

ஜோசப் கென்ட் - டிரம்ப்
ஜோசப் கென்ட் - டிரம்ப்
Published on

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) தலைவர் ஜோசப் கென்ட், டிரம்பின் வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஜோசப் கென்ட் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராக இருந்து வந்தார்.

ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜோசப் கென்ட் நேற்று (மார்ச் 17) எக்ஸ் தளத்தில் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஈரான் அமெரிக்காவுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களின் அழுத்தத்தினால் தான் இந்தப் போர் தொடங்கப்பட்டது. இந்தப் போருக்கு நான் மனசாட்சிக்கு எதிராக ஆதரவு அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் உள்ள சிலர் இணைந்து “தவறான தகவல் பிரச்சாரம்” மூலம் போருக்கு ஆதரவான சூழலை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் போரை “இஸ்ரேல் உருவாக்கிய போர்” என்று விமர்சித்த கென்ட், “இந்தப் போரால் அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. புதிய தலைமுறையினரை உயிரிழக்க அனுப்ப நான் ஆதரிக்க முடியாது” என்றார்.

இந்தப் போரில் இதுவரை ஈரானில் சுமார் 1,300 பேர், லெபனானில் சுமார் 880 பேர், இஸ்ரேலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் தகவல்படி, 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

2003ஆம் ஆண்டின் ஈராக் போரைப் போலவே, இப்போதும் அதே மாதிரியான தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக கென்ட் குற்றம்சாட்டினார். அதே தந்திரம் தற்போது ஈரானுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

இராணுவத்தில் 11 முறை களப்பணியாற்றிய வீரனாக, “இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு போருக்காக அமெரிக்காவின் அடுத்த தலைமுறை இளைஞர்களைப் பலிகொடுக்க என்னால் முடியாது. இது அமெரிக்க மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்புக்கு மிகவும் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த ஜோசப் கென்ட் ராஜினாமா செய்திருப்பது வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

logo
Andhimazhai
www.andhimazhai.com