
வட ஆர்க்டிப் பகுதியில் உள்ள கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து தற்போது டிரம்ப் ஆலோசனை செய்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அடாவடியாக வெனிசுலா அதிபரைக் கடத்திச் சிறைப்பிடித்த டிரம்பின் அமெரிக்கப் படைகள், அடுத்தகட்டமாக கிரீன்லாந்து மீது கண் வைத்துள்ளது. அந்த நாட்டுடன் இணைந்து அமெரிக்காவுடன் நேட்டோ அமைப்பில் உள்ள டென்மார்க், இதை வன்மையாகக் கண்டித்துள்ளது.
உறுப்பு நாடு ஒன்றின் மீது வேறு எந்த நாடும் தாக்கினால் நேட்டோ நாடுகள் அனைத்தும் சேர்ந்து பதில்தாக்குதல் நடத்த வேண்டும் என்பது அதன் உடன்படிக்கையில் முக்கிய அம்சம். இப்போதோ நேட்டோவில் இருக்கும் (அமெரிக்க) நாடே சக உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறுவது புதிய நிலைமைகளை உண்டுபண்ணியுள்ளது.
அமெரிக்காவின் குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அடாவடிக்கு எதிராக பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சுமார் 57 ஆயிரம் மக்கள் வசிக்கும் கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கப்போவதாகவெல்லாம் டிரம்ப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் விற்பனைக்கெல்லாம் கிரீன்லாந்தைப் பேசவில்லை என அந்த நாடும் டென்மார்க்கும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
ஆனாலும் கிரீன்லாந்தில் ஏராளமான அளவில் படிந்துள்ள கனிமப் படிவுகள், அமெரிக்காவின் இராணுவ, தொழில்நுட்பத் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளது என்பதால், அதை எப்படியாவது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.
அமெரிக்காவின் அரச துறைச் செயலாளர் ரூபியோவும் இதை உறுதிசெய்தார்.