அமெரிக்காவின் பிரபல பாலியல் குற்றவாளியும் பெரும் பணக்காரருமான எப்ஸ்டீனின் தீவுக்கு தான் சென்றதில்லை என்றும் அவருடன் எப்போதும் நட்பு பாராட்டியதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தனக்குச் சொந்தமான ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீனின் மிக மோசமான புத்தக ஆசிரியரான உல்ஃப், சதித்தனமாக தன்னைப் பற்றியும் தன்னுடைய பதவியைப் பற்றியும் அவதூறு செய்யும்படியாக இப்படி தகவல்களைப் பரப்பியுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த நவம்பரில் எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பான வெளிப்படை மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து அமெரிக்க நீதித்துறையால் எப்ஸ்டீனின் கோப்புகள் எனும் பெயரில் முப்பது இலட்சம் ஆவணங்கள் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் செல்வந்தராக இருந்த எப்ஸ்டீன், பன்னாட்டு அரசுத் தலைவர்களுக்கு தரகராகவும் சிறுமிகளைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து அவர்களுக்குப் பயன்படுத்தியதாகவும் வழக்கு பதியப்பட்டிருந்தது. அந்த வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவர் மர்மமாக உயிரிழந்துபோனார்.
எப்ஸ்டீனின் கோப்புகளில் குறிப்பிடப்படும் நபர்களில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பில்கேடஸ், எலான் மஸ்க், அமெரிக்க இந்தியரான மிரா நாயர், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி ஹர்தீப் சிங் பூரி உட்பட பலரும் அடக்கம்.
மறைந்த எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தனித் தீவுக்கு யார்யார் சென்றார்கள் என்ற விமானப் போக்குவரத்து தரவுகளும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியாகி மூன்று நாள்கள் ஆகியும் அதன் சூடு இன்னும் அடங்கவில்லை.