அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து சேற்றை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக மியாமி, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க், வாஷிங்டன், சிகாக்கோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று காலை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, இது மன்னராட்சி அல்ல, அரசர் யாரும் இல்லை பதாகைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.
சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம் எழுப்பினர்.
குடியேற்றவாசிகளுக்கு எதிராக அடக்குமுறைகள்,அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அரசர் டிரம்ப் என்று குறிப்பிடப்பட்டுள்ள போர் விமானத்தில் விமானியாக அரசர் போல கிரீடம் அணிந்து உட்கார்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப், போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது சேற்றை வீசுகிறார். அப்போது டேஞ்சர் ஜோன் என்ற பாடலும் ஒலிபரப்பாகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.