மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதில் சமநீதி தேவை என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை வரையறுத்தால் தமிழ்நாடு இப்போது 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் தொகுதிகளின் எண்ணிக்கையை 800க்கும் அதிகமாகக் கூட்டுவதாகக் கூறப்படும்நிலையில் தமிழ்நாட்டுக்கு 22 தொகுதிகள் கிடைக்கவேண்டும்; ஆனால் 10 தொகுதிகள்தான் கிடைக்கும்; 12 தொகுதிகள் இழப்பு ஆகும் என்றும் தெரிவித்தார்.
1971ஆம் ஆண்டு மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழகம் எதிரானது அல்ல; அது சமநீதி அடிப்படையில் இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையை மேலும் 30 ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்கவேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்திருந்தார். தி.க. தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பெ.சண்முகம், இரா.முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. தலைவர் அன்புமணி, த.வா.க. தலைவர் வேல்முருகன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. தலைவர் ஈசுவரன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அன்சாரி, மக்கள் நீதி மையம் கமல், த.வெ.க. ஆனந்த் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.