(வலமிருந்து) டி. ஆர். பாலு, ஞா.பிரேம்குமார், வி. என். வேணுகோபால்
(வலமிருந்து) டி. ஆர். பாலு, ஞா.பிரேம்குமார், வி. என். வேணுகோபால்

தொகுதி நிலவரம்: ஸ்ரீபெரும்புதூர்: பாய்கிறார் பாலு!

சென்னையை ஒட்டி அமைந்துள்ள தொழிற்சாலைகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி ஸ்ரீபெரும்புதூர். இத்தொகுதியில் திமுக வேட்பாளராக டி ஆர் பாலு, அதிமுக கூட்டணி வேட்பாளராக ஞா.பிரேம்குமார், பாஜக கூட்டணியில் தமாகாவைச் சேர்ந்த வி என் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பாக வெ.ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தின் மிகப்பெரிய நாடாளுமன்றத் தொகுதியான ஸ்ரீப்பெரும்புதூரில் மதுரவாயல், அம்பத்தூர்,ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரந்துள்ளது இந்த தொகுதி.

கடந்தமுறை(2019) இத்தொகுதியில் களமிறங்கிய டி ஆர் பாலு மொத்தம் 7,93,281 வாக்குகள் வாங்கினார். அவருக்கு அடுத்த இடத்தில் அதிமுக கூட்டணியில் நின்ற பாமகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் 2,85,328 வாக்குகளையே பெற முடிந்தது. மூன்றாவது இடத்தை மக்கள் நீதிமன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 1,35,525 வாக்குகளுடன் பெற்றிருந்தார்.

தற்போது பாமக வாக்குகள் பிரிந்து பாஜக கூட்டணியில் நிற்கும் தமாகவுக்குப் போவதால் அதிமுக எந்த அளவுக்கு வாக்குகள் பெறமுடியும் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. தமாகா வேட்பாளராலும் டிஆர் பாலுவுக்குப் போட்டியைத் தர இயலாத சூழலே உள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிரம்மாண்ட வெற்றியை டி ஆர் பாலுவே பெறுவார் என்கிறார்கள்.

தொகுதியின் பிரச்னைகளில் முக்கியமானது வளர்ந்துவரும் மக்கள் தொகை, தொழில்துறைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்யப்படுவதற்கான தேவை பெரும் அளவில் இருப்பதுதான். சாலை வசதிகளில் தொடங்கி, சுகாதார வசதிகள், போக்குவரத்து போன்றவற்றில் பெருமளவுக்கு தேக்கம் நிலவுகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் எதுவுமே செய்யப்படவில்லை என்ற குறை உள்ளது.

சீமானுடன் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ரவிச்சந்திரன்
சீமானுடன் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ரவிச்சந்திரன்

போரூர், மணப்பாக்கம், குன்றத்தூர், கோவூர் போன்ற பகுதிகளில் சாலை வசதிகள் தேவை என்கிற கோரிக்கை உள்ளது. மணப்பாக்கம் பிரதான சாலை விரைவில் அகலப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடம் இருக்கிறது. அனகாபுத்தூர்- தரப்பாக்கம் மேம்பாலப் பணியை முடித்துக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட்டு டி ஆர் பாலு வாக்குகள் சேகரிக்கிறார்.

கமல்ஹாசன், உதயநிதி, வைகோ, உள்ளிட்டோர் ஒரு சுற்று பிரச்சாரத்தை திமுக வேட்பாளருக்காக முடித்துள்ளனர். அதிமுக பிரேம்குமாருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா போன்ற கூட்டணித்தலைவர்களும் தலைகாட்டி பிரச்சாரம் செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் உடல்நிலை காரணமாக சற்று ஓய்வெடுக்க நேர்ந்தாலும் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த தேர்தலில் நா தக கட்சி வேட்பாளர் ஹெச் மகேந்திரன் என்பவர் 85000 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளர் சுமார் நாற்பதாயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். தமாகா- பாஜக- அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் வி.என்.வேணுகோபால் உட்கட்டமைப்புக் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பிரச்சாரம் செய்துவருகிறார். ஆனாலும் திமுக கூட்டணி வேட்பாளரே முந்துகிறார். கடந்தமுறை வென்றதுபோல் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வாரா, அல்லது வித்தியாசம் குறையுமா என்பதுதான் கேள்வி. அதிமுக, தமாகா கட்சிகள் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடிக்கலாம் என்பதே இப்போதைய களநிலவரம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com