(வலமிருந்து) ராபர்ட் புரூஸ், ஜான்சி ராணி, நயினார் நாகேந்திரன்
(வலமிருந்து) ராபர்ட் புரூஸ், ஜான்சி ராணி, நயினார் நாகேந்திரன்

நெல்லை தொகுதி நிலவரம்: மும்முனைப் போட்டி

திருநெல்வேலி இதுவரை 17 மக்களவை தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 7 முறை அதிமுகவும் 5 முறை காங். கட்சியும் 3 முறை திமுகவும் தலா ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, சுதந்திரா கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.

இந்த மக்களவை தொகுதியானது திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் அகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

கடந்த 2019 ஆ-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 5,22,623 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,37,166 ஓட்டுகள் பெற்றார். 1,85,457 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஞானதிரவியம் வெற்றி பெற்றார்.

நெல்லை மக்களவைத் தொகுதியில் நாடார், முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். அதற்கு அடுத்ததாக பட்டியல் இனத்தவரும், பிள்ளைமார் சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். யாதவர் பிராமணர், செட்டியார் ரெட்டியார் நாயக்கர் உள்ளிட்ட சமூகத்தினரும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவ நாடார்களும் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் சமூகமும் உள்ளனர்.

நெல்லை மக்களவைத் தொகுதியில் பெண் வாக்காளர்கள் 8,44,284 பேரும் , ஆண் வாக்காளர்கள் 8,06,096 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 152 பேரும் உள்ளனர்.

தற்சமயம் திமுக கோட்டையாகக் கருதப்படும் நெல்லைத் தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு கொடுத்திருக்கிறது திமுக. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகிறார்கள். 10 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது. இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நெல்லை மக்களுக்கு புதியவர்தான். நெல்லையில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடந்த அன்றுதான் நெல்லை மக்களுக்கு இவரைத் தெரியும். பெரும் கூட்டத்திற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வேட்பாளரை அறிமுகம் செய்தார். நெல்லை மக்களவை தொகுதியில் நாடார் சமூகத்தினர் அதிகம் இருப்பதால் நாடார் வாக்காளர்களை பெறுவதற்கு கட்சிகளுக்குள் போட்டாபோட்டி நடக்கிறது. பிரதமர் மோடி 2-வது முறையாக நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நகேந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதே போல முக்கிய தலைவர்கள் அனைவரும் நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். அதனால்தான் நெல்லையில் திமுக கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் தான் போட்டியே என்ற தோற்றம் கட்டமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் என்ற அடையாளமும் அவருக்கு பலம்தான். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுவதாலும், அதிமுகவைச் சேர்ந்தவராகவே மக்களுக்கு அறிமுகமான நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளராக மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்கு என்ன செய்யபோகிறார் என்பதை போட்டியாளர்கள் உற்று கவனிக்கின்றனர்.

ஆரம்பமே சின்ன தடுமாற்றறத்துடன் அதிமுக சார்பில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டு ஜான்சிராணி அறிமுகப் படுத்தப்பட்டார். இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, மாவட்டத்தில் உள்ள எல்லா பதவிகளையும் கைப்பற்றிய போதும், திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவியானார் ஜான்சிராணி. ஜான்சிராணியின் உள்ளூர் செல்வாக்கு மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், எஸ்டிபிஐ இடம்பெற்றிருப்பதால் மாயாஜாலத்தை நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நெல்லை நாம் தமிழர் வேட்பாளர் சத்யா
நெல்லை நாம் தமிழர் வேட்பாளர் சத்யா

நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்ந்து 2-வது முறையாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் சத்யா. இவர் கடந்தமுறை 49,935 வாக்குகள் பெற்று 4-வது இடத்தைப்பிடித்தார். இந்தமுறையும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேர்தலுக்குச் சில நாட்களே உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் தலைவர்களின் தேர்தல் பிரச்சார முற்றுகை அனல்பறக்கிறது. தமிழகத்துக்கு 8-வது முறையாக வரும் பிரதமர் மோடி தனது கடைசி பிரச்சாரக்கூட்டமாக நெல்லையைத் தேர்ந்தெடுத்தது அரசியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com