நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

குடியால் 1000 தற்கொலைகள், டாஸ்மாக்கை முதல்வர் எப்போது மூடுவார்? - பா.ஜ.க. பதில் கேள்வி

குடியால் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் பலியாகிக்கொண்டே இருக்கிறார்கள்; எப்போது டாஸ்மாக்குக்கு முதலமைச்சர் தடை விதிப்பார் என பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார்.

நீட் குறித்து இன்று காலை முதல் இரண்டு முறை முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும்வகையில், நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ தற்கொலைகளின் காரணமாக நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கடந்த காலங்களில் 10ஆவது, 12ஆவது வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வியடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதற்காக, அந்தத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டோமா? தோல்வியுறும் மற்றும் அச்சப்படும் மாணவர்களுக்கு தைரியம் அளிக்காத சமுதாய கட்டமைப்பு, பள்ளிகளின் கல்வி அமைப்பே இந்த தற்கொலைகளுக்கு காரணம்.” என்று கூறியுள்ளார்.

மேலும்,

“நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னரே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இரட்டை இலக்கத்தில் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பயில தேர்வு பெறுகின்றனர். அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி பயில்கின்றனர். இது வரை இல்லாத அளவில், தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் அதிக அளவில் இடம் பெறுகின்றனர். அதனால் ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது.கடந்த 50 வருடங்களில், கடந்த சில ஆண்டுகளாக தான் ஏழை எளிய மாணவர்கள் பலர் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள்.” என்று அவர் பட்டியலிட்டுள்ளார்.

சமீபத்தில் கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் உட்பட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் காவல்துறையையே கலைத்து விட வேண்டும் என்றால் அது முறையானதாக இருக்குமா என்றும்,

”எந்த வயதிலும், தற்கொலை எண்ணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. மன அழுத்தத்தின் உச்சக்கட்டம் அது. ஒரு சிலரை மட்டுமே அது தொற்றிக்கொள்ளும். ஆனால், மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்வதை விட மற்றவர்களின் துன்பச் செயலால், வெறுப்பால் தற்கொலை செய்துகொள்வது தான் உண்மையிலேயே கொடூரமானது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் குடியின் கொடுமையால் நடைபெற்ற பல துன்பங்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதே, ஏன் எனக் கேட்டு, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி, மதுரை திருமங்கலம், கும்பகோணம், திருப்பூர், ஜோலார்பேட்டை, ராசிபுரம், திருவண்ணமலை, அன்னூர் ஆகிய ஊர்களில் குடியால் நிகழ்ந்த பத்து தற்கொலைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இவை, ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் சில உதாரணங்கள்தான். குடியால் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் தற்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? 'மது' எனும், 'குடி' எனும் பலிபீடத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டே இருக்கின்றனவே; 'டாஸ்மாக்' எனும் தடுப்புச் சுவர் எப்போது பொலபொலவென உதிர்ந்து விழும்? எப்போது டாஸ்மாக், மதுவுக்கு தமிழகத்தில் தடை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா?” என்றும் பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com