7 ஊழல்கள் விவகாரம் - பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் சொல்கிறது

7 ஊழல்கள் விவகாரம் - பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் சொல்கிறது

நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தியுள்ள மைய அரசின் 7 ஊழல்களுக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிறீநேட் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, இதுபற்றி விவரித்தார்.

அப்போது, “ மைய அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் ஏழு ஊழல்களை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த ஊழல் முறைகேடுகளைப் பற்றி தீர விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடிதான் இந்த ஊழல்களுக்கு பொறுப்பு என்பது தெளிவு. அவரே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.” என்றார் சுப்ரியா.

“பிரதமர் இப்போதாவது அவர் மவுனம் கலைப்பாரா? ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா?” என்று கேட்டவர்,

”'பாரத்மாலா' திட்டத்தில் சாலை அமைக்க ஒரு கி.மீ.க்கான செலவு 15.37 கோடியிலிருந்து ரூ.32 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நடைமுறையிலும் குறைபாடு உள்ளது. விரிவான திட்ட அறிக்கையும் அளிக்கப்படாமல் இருந்துள்ளது. பாதுகாப்பு ஆலோசகர்கள் நியமிக்கப்படவில்லை. இதைப்போல, துவாரகா விரைவுச்சாலை திட்டத்திலும் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.18 கோடியில் இருந்து ரூ.250 கோடியாக செலவு அதிகரித்துள்ளது.” என்றும்,

”ஐந்து சுங்கச்சாவடிகளைத் தணிக்கை செய்ததில், ரூ.132 கோடி ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இப்படியென்றால் எல்லா சுங்கச்சாவடிகளிலும் தணிக்கை செய்தால் எவ்வளவு நடந்திருக்கும்?

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் இறந்துபோன நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் 88 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் எங்கே போனது?

அயோத்தி வளர்ச்சித் திட்டம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றிலும் ஊழல்கள் நடந்துள்ளன.” என்று வரிசையாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

”தணிக்கை அறிக்கையைத் தயாரித்தவர்களை 'தேச விரோதி' என்று பிரதமர் வர்ணிக்கலாம். அவர்கள் மீது சோதனை நடத்தி, சிறையில் அடைக்கலாம். ஆனால், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம். நடவடிக்கை எடுக்கும் முன்னர், ஏழைகளுக்கான திட்டங்களில் பலனடைய அவர்கள் அனுமதிக்கப்பட்டது எப்படி என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.” என்றும் சுப்ரியா சிறீநேட் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com