இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட என்னை அழைத்தார் கலைஞர்! - மனம் திறந்த ரஜினி

இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட என்னை அழைத்தார் கலைஞர்! - மனம் திறந்த ரஜினி

“இரட்டை இலக்கு ஓட்டுப்போட்ட என்னை படம் பார்க்க கலைஞர் கருணாநிதி அழைத்தார்” என்று நடிகர் ரஜினிகாந்த் ‘கலைஞர் 100’ விழாவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தினர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திரை பிரபலங்களான ரஜினி, கமல், சிவராஜ்குமார், சிவகுமார், கார்த்தி, சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஹினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, லட்சுமி மேனன், சாயிஷா, அதிதி சங்கர், இயக்குநர்கள் டி.ராஜேந்திரன், ஷங்கர், பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இதில் ஆந்திர அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜாவும் கலந்து கொண்டார்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: “கலைஞர் கருணாநிதி குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர். சாதாரண நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வைத்தவர். அவர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்.ஜி.ஆரை உருவாக்கி இருப்பார். ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. ஆனால் கருணாநிதிக்கு இந்த இரண்டுமே இருந்தது.

தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும். சிலவற்றை படித்தால் நெருப்பு வரும். சிலபேர் தன்னுடைய அறிவை காட்டுவதற்காக பேசுவார்கள்.

மற்றவர்களுக்கு புரிகிறதா என்று யோசிக்கமாட்டார்கள். ஆனால் கருணாநிதி அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும் பாமரனுக்கு பாமரனாகவும் பேசுவார்.

என் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிறார் என்று சொன்னதும், அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அவரிடம் சொல்வதற்காக சென்றேன். ஏன் என்றால் எனக்கு அப்போது தமிழ் பெரிதாக வராது. நான் இதை அவரிடம் கூறியபோது, ‘சிவாஜி நடித்தால் சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன். யார் நடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன்’ என்று பதிலளித்தார்.

வழக்கமாக கருணாநிதி ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டனர். ‘இரட்டை இலைக்கு’ என்று அந்த நடிகர் சொன்னது அப்போது ட்ரெண்டாகி விட்டது. அன்று மாலை கருணாநிதியுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் வரவேண்டும் என்று கருணாநிதி கூறிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க, காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே, ‘சூரியன்’ பக்கத்துல உட்காருங்க’ என்று சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான்.

‘உங்களுக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என்று அவரிடமே சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் தன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. அவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com