பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்

பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்

பரபரப்பான நிலையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் குறைவான ஆதரவுடன் கலந்து கொண்ட பன்னீர் செல்வம்  சிரித்தமுகத்துடனும், ஆதரவில் மிதந்த எடப்பாடி கடுகடுப்புடனும் காணப்பட்டது ஏன் என்று இந்த கட்டுரையைப் படித்தால் புரியும்.

2, ஜூன் 2022

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்-கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஜூன் 2 ஆம் தேதி  கூட்டறிக்கையாக வெளி-யிட்டனர்.

14,ஜூன் 2022

ஜூன் 14 ஆம் தேதியன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. கூட்டத்தில் அதிமுகவுக்கு  ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பல மாசெக்கள் பேசினார்கள். இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகத் தன் பேட்டியில் கூறினார்.

16 ஜூன்,2022

ஜூன் 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுக-வில் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு இழைக்கும் துரோகம். மாசெக்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற  சப்ஜெக்ட் திடீரென திட்டமிட்டு புகுத்தப்பட்டது,' என்றார். பன்னீர் தரப்பு, ‘பொதுக்குழுவில் ஒற்றைத் தீர்மானம் கொண்டுவந்தால் சட்ட

சிக்கல் உண்டாகும், இரட்டை இலை சின்னம் கேள்விக் குறியாகும்' என்று எச்சரித்தனர்.

19, ஜூன் 2022

இந்த தினத்தின் இரவில்,  ‘பொதுக்-குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும்' என்று எடப்பாடிக்குக்  கடிதம் எழுதினார் பன்னீர்.

20, ஜூன்,2022

20 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்ட மண்டபத்தை ஆய்வு செய்துவிட்டு, ‘பொதுக்குழு திட்டமிட்டபடி எழுச்சியோடு நடக்கும்‘ என்று அறிவித்தார் கே.பி. முனுசாமி.

21,ஜூன்2022

வானகரத்தை உள்ளடக்கிய ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூன் 21 ஆம் தேதி கடிதம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்.

22, ஜூன்2022

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு  ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிசாமி, சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கில்  ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். இந்த வழக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 22 பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இரவு 8.45 மணியளவில் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ‘அதிமுக பொதுக்குழுவை நடத்தக் கூடாது என்று யாரும்  சொல்லவில்லை.  பொதுக்குழு நடக்கட்டும். ஆனால்  அஜெண்டாவில் இல்லாத தீர்மானம் எதையும் வைத்து நிறைவேற்றக் கூடாது என்றுதான் சொல்கிறார்கள். எனவே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் தடையில்லை. தீர்மானங்கள் தொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என்றார்.

22, ஜூன் 2022

‘ராகுல்காந்தியை சந்தித்த தேர்தல் வியூக வகுப்பாளரான  சுனில் தனது போனிலிருந்து எடப்பாடியைத் தொடர்புகொண்டுள்ளார். தொடர்பு கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமியிடம் அவர் பேசிவிட்டு போனை ராகுலிடம் கொடுத்துள்ளார் சுனில்.  எடப்பாடி, ராகுலிடம் நலம் விசாரித்ததோடு, விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை தொந்தரவு கொடுப்பதைச் சொல்லி பா.ஜ.க.வை எதிர்மறையாக விமர்சித்துள்ளார். ராகுலுக்கும் எடப்பாடிக்குமான போன் உரையாடல் 5 நிமிடம் நடந்துள்ளது,' இது நக்கீரன் வெளியிட்ட செய்தி.

23,ஜூன்2022

வழக்கைத் தொடுத்தவர்களில் ஒருவரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தீர்ப்பை எதிர்த்து இரவே அவசர மேல் முறையீடு செய்தார்.இந்த மேல் முறையீட்டு வழக்கு நள்ளிரவே இரு நீதிபதிகள் அமர்வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜூன் 23 அதிகாலை 2.45 மணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  வழக்கு விசாரணை சென்னை அண்ணாநகரில் இருக்கும் நீதிபதி துரைசாமியின் இல்லத்தில் நடைபெற்றது. அதிகாலை 4.15 மணிக்கு  தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘தன்னிடம் முன்வைக்கப்பப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் முடிவெடுக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அவரது கோரிக்கையை ஏற்கிறோம். அதிமுக பொதுக்குழு கூடலாம்.  பொதுக்குழுவில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம். ஆனால் வரைவு செய்யப்பட்ட 1 முதல் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த முடிவும் மேற்கொள்ளக் கூடாது,'என்றனர்.

அதிமுக பொதுக்குழு

பரபரப்பான நிலையில் பொதுக்குழுவில்  எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.  தண்ணீர் பாட்டில் வீச்சு வரை களேபரங்கள் நடந்தன.இது சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று   கூட்டத்திலிருந்து வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கோஷமிட்டார். அதிமுகவின் வாரிசு, எடப்பாடி வாழ்க, பொதுச் செயலாளர், ஒற்றைத் தலைமை எடப்பாடி , ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் என்றெல்லாம் எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

ஓபிஎஸ் வாகனத்தை எடுக்கச் சொல்லி ரகளையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஒருவர் கேமராவை பார்த்ததும் ஆர்வமிகுதியில் 'எடப்பாடியார் ஒழிக' என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டிய பிறகுதான் அவருக்கு தெரிந்தது, தான் ஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட வேண்டும் என்பது. பின் அவர் நைசாக கூட்டத்திற்குள் சென்று விட்டார்.

24ஜூன் 2022

சி.வி.சண்முகம், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  அப்போது  சி.வி.சண்முகம்,‘இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை, ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் அவ்வளவுதான். இதுதான் இன்றைக்கு நிலைமை,' என்றார்.

தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மதிவாணன் வெளியிட்டுள்ள போஸ்டரில்  ‘23/06/2022- இல் நடந்த பொதுக்குழுவில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரை அவமதிப்பு செய்த எடப்பாடி அணியினரைக் கண்டித்து அவர்களுக்கு நான் அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன்,' என்று அச்சிடப்பட்டுள்ளது.

27, ஜூன் 2022

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 27 -இல் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பின் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்து,‘ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்ட நிலையில், தலைமைக் கழக நிர்வாகிகள் அதிமுகவை வழிநடத்த சட்ட விதிகளில் இடமிருக்கின்றன. அதன் அடிப்படையில் தலைமை நிலையச் செயலாளரான அண்ணன்  எடப்பாடியை தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.  சில அதிரகசிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிப்புகளாக வருமா என்பதை கட்சிதான் முடிவு செய்யும்,' என்றார்.

ஜுன் 27 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி தலைமையில் கூடியது. உடனே  தேனியில் இருந்து சென்னைக்கு  வந்த  ஓ.பன்னீர் செல்வம் இதை சட்டத்துக்குப் புறம்பான கூட்டம் என்று குறிப்பிட்டார். மேலும் அதிமுகவில் தனக்கு எதிராக கட்சி விதிகள் மற்றும் மக்கள் பிரநிதித்துவ சட்ட விதிகளும் மீறப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்துக்கு  (ஜூன் 27) கடிதம் எழுதியிருக்கிறார். கடிதத்தில் “2017 செப்டம்பர் 12 ஆம் தேதி அ.தி.மு.க.  சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த 2 பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மேலும், இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த சட்டதிருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 14.6.2022 முதல் தற்போது வரை அ.தி.மு.க. வில் நடந்த சட்ட விதிமீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கட்டுரை எழுதப்படும் நேர  நிலவரப் படி பன்னீர் செல்வம் சட்ட ரீதியாக பலமுள்ளவராகவும்,எடப்பாடி பொதுக்குழுவில் பலமுள்ளவராகவும் உள்ளனர்.

1989 இல் நடந்தது போல் யாரும் விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை.

ஆனால் அதிமுக பலவீனமாக உள்ளது.

ஜூலை, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com