இனி செய்வது என்ன?
நூறு வருடங்களுக்கு முன் ஒரு ஜூலை மாதத்தில்தான் மகாகவி பாரதியார், தன்னை உயிராக நேசித்த பரலி சு.நெல்லையப்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். "ஒரு சிறந்த பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும்"... என்ற தனது கனவை, அந்தக் கடிதத்தில் மிக அழகாக வடித்திருந்தார். அந்த மாமேதையின் கனவை மெய்ப்பிக்கும் வகையாக செயலாற்றிய அந்திமழை இளங்கோவன் இன்று நம்மிடையே இல்லை. ஜப்பானிய மொழியில் "இகிகை" என்ற புத்தகம் பிரபலம். அதில் ஒக்கினாவா தீவில்தான் உலகத்திலே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம். நீண்டநாட்கள் ஆராய்ந்ததற்குப்பின் அவர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்ந்தனர் எனக் கண்டறியப்பட்டனர் என்று நீங்கள் உங்கள் சிறப்புப் பக்கங்களில் எழுதிய பின்தான் நாங்களெல்லாம் உணர்ந்தோம். இப்படி ஏகப்பட்ட தகவல்கள் உங்கள் சிறப்புப்பக்கங்கள் மூலம் அறிந்துகொண்டோமோ? இனி யார் தருவார் இப்படிப்பட்ட அரிய தகவல்களை நமக்கு.
இனி ஒரு கடமை நமக்கு உண்டு... இனி தான் நாம் பரவலாக அந்திமழைச் சாரலில் நனைந்து அந்த பத்திரிக்கையை தாங்கிப்பிடிக்க வேண்டும். அதுதான் நாம் அந்திமழை இளங்கோவனுக்கு தந்திடும் மாபெரும் மரியாதையாகும்.
லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை-20.
சாதித்த நாயகன்
நூறு கரங்கள் கொண்டவர் அந்திமழை இளங்கோவன் இன்று அவர் இல்லை. இருந்தாலும் அவர் ஆரம்பித்து வைத்த அந்திமழை இருக்கிறது. சிறப்புப் பக்கங்களுக்கு அந்திமழை இளங்கோவன் முன்னுரை இல்லாமல் இருக்காது. காலம் புதுமைப்பித்தன், பாரதியை மட்டுமல்ல அந்திமழை இளங்கோவன் மரணத்திலும் இரக்கம் காட்டவில்லை. சாகிற வயதில்லை..ஆனால் சாதனை செய்துவிட்டு வலிமையான வழிகாட்டியாக நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். எழுதுகிறவர் பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்க வேண்டும் என்பது கி.ரா.வின் கருத்து. எழுத்து, வாசிப்பு, இலக்கியம் இம்மூன்றையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. இலக்கு நோக்கிய பயணம் கொண்டவர்களுக்கே சாத்தியமானது. சாதித்துக் காட்டியிருக்கிறார்.
இலக்கை நிர்ணயித்துக் கடுமையாக உழைத்து கம்பீரமாக ஐந்தாம் பக்கத்தில் அஞ்சா நெஞ்சனாக நம்மை பார்த்து புன்னகையுடன் விடைபெற்றுவிட்டார் சாதித்த நாயகனாக.
எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்
பேரிழப்பு
அந்திமழை இளங்கோவனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு இளம் வயதில், அவரின் மரணத்தைக் கேட்கவே கஷ்டமாக உள்ளது.
இளங்கோவன் கூறிய வாசகம், நாம் பத்திரிக்கை நடத்தவில்லை. இயக்கம் நடத்துகிறோம் என்று கூறிய வாசகம் அந்திமழை இதழ் இருக்கும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். சில நல்லவர்களைப் பூமி தாங்க மறுக்கிறது. இவ்வளவு இளம் வயதில் மறைவு ஒரு பேரிழப்பு. ஜீவா படிப்பகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
தலித்தியத்தின் எதிர்காலம் பற்றி சிறப்பான ஆய்வு செய்துள்ளீர்கள். பிரபாகர் கட்டுரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. கவிஞர் அறிவுமதியைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள். 83 வயதிலும் அறிவுமதியைப் பற்றி இப்பொழுதுதான் அறிந்திருக்கிறேன்.
இரா. சண்முகவேல் கீழக்கலங்கல்
மதிப்பில்லை
ஜே. வி. நாதனின் ‘விருது துர்நாற்றம் அடிக்கிறது’ படித்தேன். ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே மௌனியின் கூற்றைக் கருத வேண்டும். ஒன்றுமே தெரியாதவர்களை எல்லாம் தெரிந்தவர்களாக ஏற்றுக் கொள்வதை ஒருபோதும் கலைநயம் மிக்க படைப்பாளிகள் ஆதரிக்கமாட்டார்கள். விருது என்பது காலமும் தகுதியும் அறிந்து அளிக்கப்பட வேண்டிய ஒன்று.
தி. வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி
நல்வாய்ப்பு
பூனை மனிதன் (2017) கதை அமெரிக்காவில் பலத்த அதிர்வலைகளையும், பலதரப்பட்ட விமர்சனங்களையும் கொண்டுவந்தது உண்மை. கதை மாந்தர்களின் இயற்கையான உணர்வுகள் வழியாகவும், அலைபாயும் இயல்பான மானுட உணர்ச்சிகளின் ஊடாகவும், கொந்தளிக்கும் எண்ண ஓட்டங்களின் வேகத்தோடும் கதை பயணிப்பதால் தத்ரூபமாக இருப்பதை மறுக்க முடியாது. முத்துலிங்கம் அவர்களின் கதை பற்றிய முன்னூட்டம் நல்ல தூண்டல். முதல் பக்கத்தில் வெளியான அந்திமழை இளங்கோவன் அவர்களின் மறைவுச் செய்தியும், அச்செய்தி எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகளும் விவரிக்க இயலாத பெருந்துயரம்.
பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை - 630311.
புகழ் நிலைக்கும்
அந்திமழை நிறுவன ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் இளங்கோவன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து துயறுற்றேன். கள்ளமில்லா அவரின் சிரிப்பும் அவர் தம் ஆளுமையும் என்றென்றும் மனதில் நிற்கும். ஒரு கால்நடை மருத்துவரால் இந்த அளவுக்கு பதிப்புத் துறையில் முன்னேற இயலும் என சாதித்து காட்டியவர். ஒரே ஒரு முறை அவரை நேரில் சந்தித்து அளவளாவியிருக்கிறேன். அவரது தீர்க்க தரிசனமும் தொலை நோக்கு பார்வையும் என்னை ஆட்கொண்டது. இன்னும் சிறிது நேரம் பேசலாமே என்னும் ஆர்வத்தைத் தூண்டியது அவரது பேச்சு. அவரது புகழ் என்றும் நிலைக்கும்.
மரு. அ. முருகன்
(மின்னஞ்சல் வழியாக)
காற்றில் கரைந்தார்!
அந்திமழை பதிப்பாளர் இளங்கோவனின் மறைவு உப்பு நீரால் விழித்திரையை மறைக்கச் செய்துவிட்டது. வாசகர்களின் என் அனுபவப்படிக் குறிப்பிட வேண்டுமானால் சிறப்பிதழ்களின் தொகுப்பில் அறிமுகக் கட்டுரை வரைந்து சிறப்புக்கே சிறப்பு சேர்த்த பொறுப்பான ஞானி காற்றில் கரைந்திருப்பதால், வாசிக்க அவர் கிட்டாது போனாலும், சுவாசிக்க அவர் ஆத்மாகிட்டேயே இருக்கும் தானே!
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை
இனித்தது
லொள்ளுசபா சுவாமிநாதன் நேர்காணல் முழுநீள திரைப்படத்தை ரசித்தது போல் உள்ளது. ஹீரோ வாய்ப்பைத் தவிர்த்துவிட்டதற்கு அவர் கூறிய காரணம் ஒட்டிய மணலை துடைத்துவிட்ட சமாளிப்பு போல் தெரிகிறது. சிரிப்பான அவரது கருத்துக்கள் சீரியசாகவும் தொனித்தது இனித்தது!.
எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன்குடியிருப்பு,
பன்முகம்
பல்லாண்டுகள் வருகின்ற பல பத்திரிகைகள் செய்யாத பல சாதனைகளை பன்னிரண்டு ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டிய பன்முக பண்பாளர் இளங்கோவன் அவர்கள், அவர் காட்டிய, வகுத்துக் கொடுத்த பாதையில் இனி வருங்காலங்களில் பயணிக்கும் என்பதில் என் போன்றோருக்கு எள்ளவும் சந்தேகமும் இல்லை,
வலம்புரி நாகராஜன், ஈரோடு
வாசக அஞ்சலி
நேரில் பார்த்ததேயில்லை. பழகியதுமில்லை.
ஆனாலும் அழுதது மனசு.
எங்கள் பத்திரிக்கைப் பயணத்தில் ஒரு பைலட்டை இழந்து விட்டோமே! இன்னும் பல சிறப்பிதழ்கள் வருவதற்குள்
எமனுக்கு ஏனிந்த அவசரம்!
மாரடைப்பே! உனக்கொரு மாரடைப்பு வராதா!
லாபம் பார்க்காமல் எது மாதிரியும் இல்லாத
புது மாதிரியாக கொடுத்த அந்திமழையும் கண்ணீர் மழையானதே!
பத்திரிக்கையுலகில் சிறப்பதிகாரம் செலுத்திய இளங்கோவனுக்கு.... பிரியாவிடை.
அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.
முதிர்ச்சி
விசிக தலைவர் திருமா பேட்டியில், அவர் உருவாக்கி, வளர்த்த கட்சியின் பொதுச்சமூக மதிப்பீடு என்னவாக இருக்கிறது, இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகவே மதிப்பிட்டிருக்கிறார். சாதி ஒழிப்பு என்பது மைய நீரோட்டத்துடன் கலப்பதுதான் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.
அ.குமார், சென்னை - 17