அவற்றுக்கு ஆன்மா இல்லை

கார்ப்பரேட்டுகளின் சந்தர்ப்பவாதம்
அவற்றுக்கு ஆன்மா இல்லை
Published on

புதுடெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் நான் பிஎச்டி செய்தபோது, அதற்கான ஆய்வேட்டை முதலில் பருவநிலைப் பேரழிவுகளைப் பற்றி சமர்ப்பிக்கலாம் என நினைத்திருந்தேன். இடையில் போபால் விஷவாயுப் பேரழிவு பற்றி ஒரு ஆய்வுரை நிகழ்த்தவேண்டி இருந்தது.

எனது பல்கலை மையத்தில் மாணவர்கள் ஆய்வுரை நிகழ்த்தும்போது பேராசிரியர்களும் பார்வையாளர்களும் கடினமான கேள்விகளைக் கேட்பார்கள். எனவே ஒரு பை நிறைய குறிப்புகள் ஆதாரங்களுடன் சென்று அந்த ஆய்வுரையை நிகழ்த்தினேன். என் ஜோல்னாப் பையின் கனம் பார்த்து அவர்கள் சிரித்தபோது, ‘மற்ற மாணவர்களுக்கு என்ன ஆனது என அறிவேன். எனவே தான் இந்த முன்னேற்பாடு’ என பதிலளித்தேன். யூனியன் கார்பைடு நிறுவனம் நிகழ்த்திய இந்தப் பேரழிவு பற்றிய என் உரையில் நான் ‘தொழிற்சாலைகள் மேற்கொள்ளும் இனப்படுகொலை’ எனக் குறிப்பிட்டேன். இனப்படுகொலை என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் போட வேண்டாம் என்று எதிர்ப்பு எழுந்தது. ‘பேராசிரியர் உபேந்திர பக்‌ஷியின் சொற்கள் அவை. என்னுடையவை அல்ல’ எனச் சொல்லி அவர்கள் வாயை அடைத்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆகவே பெருநிறுவனங்களின் சந்தர்ப்பவாதம் என்ற தலைப்பிலான இக்கட்டுரையை எழுதுவதற்கான தரவுகள் என்னிடம் ஏராளமாக உள்ளன.

யூனியன் கார்பைட் நிறுவன பேரழிவுத்தடம் போபாலில் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் உண்டு. அங்கே இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னால் சுரங்கம் தோண்டும் வேலைக்கு ஆப்ரோ அமெரிக்கர்களைப் பயன்படுத்தினர் இந்நிறுவனத்தார். அவர்கள் பலர் சிலிக்கோசிஸ் பாதிப்பால் இறந்தனர். ஒவ்வொருவர் இறக்கும்போதும் ஒரு கிடங்கிலிருந்து உடனே போய் சவப்பெட்டியை எடுத்துவருவர். இந்த மரணங்களைப் பற்றி எழுதிவந்த பத்திரிகையாளர் ஒருவர் இந்த சவப்பெட்டிகளைப் பற்றி விசாரித்து அறிந்த தகவல் அதிர்ச்சியூட்டியது: இவர்கள் இறப்பதற்கு முன்னரே ஏராளமான சவப்பெட்டிகளைச் செய்து வைத்திருந்தது அந்நிறுவனம்.

1970 இல் இந்தியாவில் தொழில் செய்வதற்காக விண்ணப்பித்தது யூனியன் கார்பைடு. ஐந்து ஆண்டுகள் அப்போதைய மத்திய தொழில் வளர்ச்சிக்கழகம் அதை அனுமதிக்கவில்லை. அவர்களின் தொழில்நுட்பம் மிக மோசமானது என அவர்கள் அறிந்திருந்தார்கள். எமர்ஜென்சி காலகட்டத்தில் 1975 ஆம் ஆண்டுதான் அனுமதி வழங்கப்பட்டது. “நாங்கள் அனுமதி அளிக்கவே இல்லை. எமெர்ஜென்சி காலகட்டத்தில் வழங்கப்பட்டதை எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை” என்று முன்னாள் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். யாருடைய சந்தப்பவாதம் அதற்கு அனுமதி வழங்கியது?

போபாலில் 1984இல் இந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் மெத்தில் ஐசோ சையனடு விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர். உலகின் மிக மோசமான தொழிற்சாலை பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும். இதற்காக 3.3 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் இந்தியாவால் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 1989-இல் இந்திய உச்சநீதிமன்றத்தில் 470 மில்லியன் டாலர்கள் இழப்பீடு என தீர்ப்பானது. ஏன் இவ்வளவு குறைவாகப் பெற ஒப்புக்கொண்டார்கள்?

யூனியன் கார்பைடை ‘டௌ கெமிக்கல்ஸ்’ என்ற நிறுவனம் 2002-இல் வாங்கி உள்ளது. ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கினால் அதன் சொத்துகள், கடன்கள், பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் வாங்கிய நிறுவனமே பொறுப்பு. ஆனால் டௌ கெமிக்கல்ஸ், இந்த போபால் பிரச்னை தன் பொறுப்பில்லை என்கிறது. அதற்கு ஆதரவான சட்டக் கருத்துகளை இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களும் அரசியல்வாதிகளுமாகிய இருவர் தங்கள் லெட்டர் பேடுகளில் அளித்ததைக் காட்டியது. இவை எதுவும் நீதிமன்றத்தில் நிற்கப்போவதில்லை. இன்னும் இது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது. யூனியன் கார்பைடு உண்மையில் பூச்சிக்கொல்லிதான் தயாரித்ததா? போரில் பயன்படுத்தும் வேதிப்பொருள்களை பரிசோதிக்க இன்னொரு ஆலையையும் அங்கே நடத்தியதா? அன்று லீக் ஆனது மெத்தில் ஐசோ சையனைடு மட்டும்தானா? எதற்கும் பதில் இல்லை! இதே டௌ கெமிக்கல்ஸ், அமெரிக்க அரசு நிறுவனத்திடம் மட்டும் அந்நாட்டில் யூனியன் கார்பைடு ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகக் கூறி உள்ளது. நாட்டுக்கொரு அணுகுமுறை என்பது சந்தர்ப்பவாதம் தானே?

ஆஸ்பெஸ்டாஸ் என்றதும் அதுபற்றி சில தகவல்கள். 1924-இல் லண்டனில் ஆஸ்பெஸ்டாஸ் மக்களுக்கு குணப்படுத்தமுடியாத நுரையீரல் புற்றுநோயை உருவாக்குகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தும் அதில் ஈடுபட்ட பெருநிறுவனங்கள் அதை தோண்டி எடுத்து உலகெங்கும் பரப்புவதை நிறுத்தவே இல்லை.. இன்று உலகில் 70 நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸுக்கு தடை. இந்தியாவில் கிடையாது. ரஷ்யா, கசகஸ்தான், சீனத்திலிருந்து வந்துகொண்டுதான் உள்ளது. அதன் உபபொருட்களை பெருநிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக உற்பத்தி செய்துகொண்டுதான் உள்ளன. அமெரிக்க பன்னாட்டுப் பெருநிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸின் பேபி முகப்பவுடர் எவ்வளவு பிரபலம்? அதில் உள்ள டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலந்து தஙகளுக்கு புற்றுநோய் விளைவித்ததாக அமெரிக்கா முழுக்க வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இங்கே தங்கள் பேபி பவுடர் பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் விளம்பரம் செய்தது. அது தடை செய்யப்படவே இல்லை. பதிலுக்கு அந்நிறுவனத்தின் ஆலை மகாராஷ்டிராவில் மூடப்பட்டது. அவ்வளவுதான்.

தங்கள் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது அந்நிறுவனத்துக்குத் தெரியாதா? 1970களிலேயே அதற்குத் தெரியும் என ராய்ட்டர் நிறுவன ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. ஆனாலும் இன்னும் மூடி மறைத்ததற்குப் பெயர் என்ன? பல பெயர்கள் உண்டு. ஒன்று: சந்தர்ப்பவாதம்.

இது தகவல் தொழில்நுட்ப யுகம். அன்று பெருநிறுவனங்களின் ஒரே நோக்கம்: லாபமீட்டுவது. இன்று தரவுகளைச் சேர்ப்பது. அந்த தரவுகளை பணமாக மாற்றிக்கொள்வது. அதைத்தான் கண்காணிப்பு முதலீட்டியம் என்கிறார்கள். கூகுள் தன் நோக்கமாக ‘Do No Evil’ என்ற வாசகங்களைக் கொண்டிருந்தது. இன்று அது நேர்மையாக மாறியதால் அந்த வாசகங்கள் இடம்பெறுவது இல்லை.

சல்வடார் அலெண்டே

மெட்டா நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு அதன் நிறுவனர் மார்க் சக்கர்பக் அளித்த உள் நிறுவனச் சுற்றறிக்கைக் குறிப்பொன்று வெளியானது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதில் அவர் சொன்னார்: ‘நன்மை தீமை பற்றிக் கவலை கொள்ளாதீர்கள்; எது பிரபலமாகிறதோ அதில் கவனம் கொள்ளுங்கள்’ என்று. மெட்டாவின் பயனர்கள் பற்றிய தரவுகளை இன்னொரு நிறுவனத்துக்குக் கொடுத்து, விளம்பர வருவாய் ஈட்டியதற்காக (கேம்பிரிட்ஜ் அனலிடிகா) மார்க் சக்கர்பக், அமெரிக்க நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொண்டதை நினைவில்கொள்ளுங்கள்.

வாட்ஸப் நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டது. ‘யாரும், அதாவது வாட்ஸப் கூட உங்கள் சாட்களை, உரையாடல்களை பார்க்கவோ கேட்கவோ முடியாது’ இன்னுமா நம்புகிறீர்கள் அதை.

கோலார் தங்கவயலில் சுரங்கம் தோண்டிய நிறுவனங்கள் அத்தொழில் நடக்கும் வரை அங்கு பள்ளிகள், மருத்துவமனைகள் நடந்தன. சுரங்கத் தொழில் முடிந்ததும் இவை அனைத்தும் மூடப்பட்டன. பெரு நிறுவனங்களுக்கு ஆன்மா இல்லை. அவை இயற்கைக்கு எதிரானவை; மானுடத்துக்கு எதிரானவை. அவற்றின் நோக்கம் லாபம் ஒன்றுதான்.

எழுபதுகளில் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் லத்தீன் அமெரிக்காவில் அரசுகளைக் கவிழ்த்துக் கொண்டிருந்தன. உள்நாட்டு நிர்வாகத்தில் தலையிட்டு வந்தன. இதைத் தொடர்ந்து சிலி பன்னாட்டு பெறு நிறுவனங்களை முறைப்படுத்தும் நெறிமுறைகளை உருவாக்க ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கான நெறிமுறைகளை உருவாக்க முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் எல்.கே. ஜா தலைமையில் ஐநா குழு ஒன்றை அமைத்தது. இது 1983-இல் ஒரு வரைவு அளித்தது. ஆனால் 1989, 90களில் இது பற்றிப் பேசப்பட்டாலும் இந்த வரைவு செயல்பாட்டுக்கு வரவில்லை. ஏன் என சொல்லவும் வேண்டுமா?

இடையில் 1979-இல் சிலியின் ஜனாதிபதி சல்வடார் அலெண்டே அவரது மாளிகையில் பெருநிறுவனம் ஒன்றின் தூண்டுதலால் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் மரணமடைந்தார்.

2003-ஐ.நா. சபைக்காக டேவிட் வெய்ஸ்ப்ரோட் என்பவர் தலைமையிலான ஒரு குழு பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை தொடர்பான பொறுப்புகள் குறித்த வரைவு அறிக்கை ஒன்றை உருவாக்கியது. ஆனால் அது ஏற்கெனவே இருப்பவற்றின் நகல்தான் எனப் புறக்கணிக்கப்பட்டது.

அவருக்கு இது பற்றி நானொரு மின்னஞ்சல் மூலம் கேட்டேன். டேவிட் வெய்ஸ்ப்டோட், “ஆமாம் இது நகல்தான். எனவே இது தேவையில்லாதது அல்ல’’ என்று பொருள் பொதிந்த பதிலொன்றை அனுப்பி வைத்தார்.

ஜான் ரெக்கி என்பவர் ஐ.நா. சபையில் தொழில்நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக இருந்தார். அவர் இந்த பெருநிறுவனங்களின் மனித உரிமை நடத்தைகளுக்கான ஒரு நெறிமுறைச் சட்டகத்தை உருவாக்கினார். அது பெருநிறுவனங்கள் தானாக முன்வந்து தகவல்களை அளிக்கவேண்டும் என்றது. அந்த அறிக்கையில் என்னைக் கவர்ந்தது ‘பெருந்தொழில் நிறுவனங்களில் கொஞ்சம்கூட ஜனநாயகமே கிடையாது’ என்ற அவரது அவதானிப்பு வாசகமே.

இந்தியாவில் தொழில் நிறுவனச் சட்டங்கள் 1985-இன் படி பெரு நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருவாயில் 5% அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். 2011-இல் காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி நாடாளுமன்றத்தில், ‘அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி தான் கருப்புப் பணத்தின் தாய்’ என்று பேசினார். அவர் பேசி முடித்த சில மணி நேரங்களில் தொழில் நிறுவனச் சட்டங்களில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அது தொழில் நிறுவனங்கள் தங்கள் மூன்றாண்டு சராசரி நிகர வருவாயில் 7.5% வரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என உயர்த்தப்பட்டதாகும். நகைமுரண் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டு தேவையா?

இதுமட்டுமல்ல என்.ஜி.ஓக்கள், சமூகப் பொறுப்பு செலவீனம் என மொத்தம் 14.5% வரை பெறுநிறுவனங்கள் செலவழிக்கலாம் என்னும்போது நாடாளுமன்றம் பெரு நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டு சேவை செய்யுமா? பெருந்தொழில் நிறுவனங்கள் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்படுமா? உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

2017-இல் இதே சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எந்த அரசியல் கட்சிக்கு பணம் கொடுத்தோம் என பெருநிறுவனங்கள் வெளியே சொல்லவேண்டியது இல்லை. 7.5% என்ற எல்லை அகற்றப்பட்டது. இதற்கு அர்த்தம் எவ்வளவு வேண்டுமானாலும் அளிக்கலாம் என்பதே. இதில் பிறந்தவையே தேர்தல் பத்திரங்கள்.

2024-இல் உச்சநீதிமன்ற இந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லாது எனக் கூறியதுடன் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்துவிட்டது. ஆனால் அதன் மூலம் பெற்ற நிதியை அப்படியே விட்டதில் எனக்கெல்லாம் வருத்தம்தான்!

மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ADR) வெளிநாட்டில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக பெருநிறுவன நிதி பெற்றதாக காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது! இதற்காக இக்கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 2014-இல் உயர்நீதிமன்றம் அளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த கட்சிகள் பின்னர் அம்மனுவை திரும்பப் பெற்றன. நாடாளுமன்றத்தில் 1975-இல் இருந்து இப்படிப் பெற்ற நிதிகள் செல்லுபடியாகும் என பின் தேதியிட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மேற்கொண்டுவிட்டனர்.

லாபம் ஒன்றையே நோக்கமாகச் செயல்படும் பெருநிறுவனங்களின் செயல்பாட்டின் ஆணிவேர் சந்தர்ப்பவாதமாகவே இருக்கிறது. அதிலிருந்தே அவற்றின் சுரண்டல்கள் பிறக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநில ஆதிவாசிகள் சொல்கிறார்கள்: “பெருநிறுவனங்கள் எங்களைச் சிரிக்க வைப்பதில்லை; அழ வைக்கின்றன. அவை எங்களுக்குச் சோறிடுவதில்லை: எங்களைத் தான் சாப்பிடுகின்றன.”

தற்போதைய கண்காணிப்புப் பொருளாதாரம் சார்ந்த பெருநிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவை உண்மையைப் போன்ற ஒன்றை நம் முன் வைக்கின்றன. அசல் உண்மையை மறைக்கின்றன. அசல் என்பது அவை மனிதத் தன்மையை இழந்த நிறுவனங்கள் என்பதே ஆகும்.

(முனைவர் கோபால் கிருஷ்ணா, பீகாரைச் சேர்ந்த செயல்பாட்டாளர். எழுத்துவடிவம்: ஜான் ஸ்னோ)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com