தமிழ் சினிமாவில் பிரேக் அப்!

தமிழ் சினிமாவில் பிரேக் அப்!
தமிழ் சினிமாவில் பிரேக் அப்!
Published on

'ப்ரேக் அப்' என்ற வார்த்தை இப்போதைய Gen Z வரை பரவிவிட்டது என்பதை அவர்களுடன் பேசும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு முன்னால் பிறந்த மில்லெனியல்களின் காலகட்டத்தில்தான் இந்த ப்ரேக்கப் என்பது அனைத்துப் பக்கமும் பரவியது. இதனால் என்ன ஆயிற்று என்றால், ப்ரேக்கப் என்பதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் – இப்போது வாட்சப் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் இயல்பாக, ‘உன்னுடன் ப்ரேக்கப்’ என்று ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு உடனடியாக இன்னொரு நபரை எல்லாப் பக்கங்களிலும் ப்ளாக் செய்துவிட்டு அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவது எல்லாப் பாலினங்களிலும் நடக்கிறது. இதை நடைமுறையில் நிறைய பார்க்கவும் முடிகிறது. Reddit போன்ற தளங்களில் சிறுவயது இளைஞர்களும் பெண்களும் இதைப்பற்றித்தான் அவர்களுக்கு ப்ரேக்கப் அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழர்களாகிய நமது வாழ்க்கையில் எது நடந்தாலும் அது உடனே தமிழ் சினிமாவில் வந்துவிடும் என்பது தமிழ் மரபு. எனவே, இந்த ப்ரேக்கப்பும் தமிழ் சினிமாவில் வந்துவிட்டது. இப்போதைய செல்ஃபோன் காலகட்டத்தில் இது காட்டப்படுவது சரி. ஆனால் பொதுவாகவே, செல்ஃபோன்கள் இல்லாத காலங்களில், ப்ரேக்கப் என்ற வார்த்தையே தெரியாத காலங்களில் தமிழ் சினிமாவில் எப்படி இந்த ப்ரேக்கப் காட்டப்பட்டது? இதைத்தான் இந்த மாதம் நமது கட்டுரையில் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

முதன்முதலில் முப்பதுகளில் இருந்து நாற்பதுகளின் முடிவு வரை வந்த படங்களை எடுத்துக்கொள்வோம். இந்தக் காலகட்டம், புராணப் படங்களே பெரும்பாலும் வெளியான காலகட்டம். அந்தப் படங்களின் இடையில் ஆங்காங்கே சில சமூகப் படங்களும் வெளியாகின. அவற்றில் சில படங்களில், இரண்டு பேருக்குள் நிகழும் பிரிவு, அதனால் எழும் பிரச்னைகள் போன்றவற்றை சில படங்கள் பேசின, அந்தக் காலத்தில் ப்ரேக்கப் என்பது இருவர் பிரிவதுதானே? எனவே இதனைப் பேசிய படங்களை முதலில் பார்ப்போம்.

1930 முதல் 1949 வரை

1935இல் மேனகா என்ற திரைப்படம் வெளியானது. அக்காலத்தில் மிகப் பிரபலமான ராஜா சாண்டோ (என்ற பி.கே. நாகலிங்கம்) இயக்கிய திரைப்படம் இது. அதேபோல், பேசும்படங்கள் வெளியான 1931 முதல் 1935 வரை புராணப் படங்களே தமிழில் வந்துகொண்டிருக்க, முதன்முதலில் வெளியான தமிழ் பேசும் சமூகப் படமாக மேனகா வெளியானது. இது டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகம். வடுவூர் துரைஸ்வாமி அய்யங்காரின் நாவலின் நாடகமாக்கம். அதன்பின் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. மேனகாவில் இன்னொரு புதிய அம்சம் என்னவென்றால், இதில்தான் முதன்முதலில் முத்தக் காட்சிகள் (ஆம். கமல்ஹாசனுக்கு வெகு காலம் முன்னரே) படமாக்கப்பட்டன. டி.கே. சண்முகமும் எம்.எஸ். விஜயாளும் காதல் கொண்ட தம்பதிகளாக நடிக்க, இருவருக்கும் பிரிவு (ப்ரேக்கப்) வந்துவிடும். உடனே டி.கே. சண்முகம் இன்னொரு பெண்ணிடம் காதல் வசனங்கள் பேசிக்கொண்டு சென்றுவிடுவார் (இன்னொரு பெண்ணாக கே.டி. ருக்மிணி நடித்தார்). அப்போதுதான் அவரது விரல்நுனிகளில் இருந்து கழுத்து வரை வரிசையாக முத்தம் கொடுக்கவேண்டும் என்று கறார் இயக்குநர் ராஜா சாண்டோ ஆணையிட, அப்படியே நடித்தார் சண்முகம். இந்தக் காட்சியில் அவர் பயந்து நடுங்கிக்கொண்டே நடித்ததாக அறிகிறோம்.

மேனகா பெரிய வெற்றிப் படமாக மாறியது. இதுதான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்த முதல் படமாகவும் ஆனது.

இதன்பின் 1937இல் எல்லிஸ். ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் எம்.ஆர். சந்தானலக்ஷ்மியும் நடித்த ‘அம்பிகாபதி’ வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. அம்பிகாபதியின் கதை, எல்லாத் திரைரசிகர்களுக்கும் தெரியும். கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும் குலோத்துங்க சோழனின் மகள் அமராவதிக்கும் இடையே ஏற்படும் காதல், அதன்பின் புறத்திணையில் மட்டுமே நூறு பாடல்கள் பாடவேண்டும் என்ற நிபந்தனையை இவர்களது காதலை அறிந்ததும் மன்னன் இடுவது, அகத்திணையில் ஒரே ஒரு பாடல் வந்துவிட்டால்கூட மரண தண்டனை கிடைக்கும் என்று சொல்வது, அதை அமராவதி அமர்ந்து எண்ணுவது, அம்பிகாபதி பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலை முதல் பாடல் என்று அமராவதி தவறாக நினைத்துக்கொண்டு, 99 புறத்திணைப் பாடல்களை அம்பிகாபதி பாடியதும், மொத்தம் நூறு பாடல்கள் முடிந்தன என்று தவறாகச் சொல்வது, இதனால் அம்பிகாபதி அடுத்த பாடலை அமராவதியை வர்ணித்துப் பாடுவது (அகத்திணை), அது உண்மையில் அவனது நூறாவது பாடல் என்பதால் மன்னன் மரணதண்டனை தருவது என்று துக்கமாக முடியும் கதை. இதில் காதலர்கள் மனமொத்து இருக்க, மன்னர் இடையில் புகுந்து மரணதண்டனையால் நிரந்தர ப்ரேக்கப் செய்து வைக்கிறார். அக்காலகட்டத்தில் அம்பிகாபதி தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான படம். பாபநாசம் சிவனின் இசையில் எல்லாமே அற்புதமான பாடல்கள்.

அதே எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்து அதன்பின் சிந்தாமணி, (1937), ஹரிதாஸ் (1944) ஆகிய படங்கள் வெளியாகின்றன. இது இந்தியாவெங்கும் பிரபலமான அக்காலத்திய கதை. பில்வமங்கள் என்ற சமஸ்கிருதப் பண்டிதர் பற்றியது. சிந்தாமணி என்ற அரசவை நடனமாதுவின் மேல் காதல் கொண்டு பில்வமங்கள் தனது மனைவியைப் பிரிந்துவிடுகிறார் (ப்ரேக்கப்). ஆனால் சிந்தாமணி, கிருஷ்ணரின் பேரில் பக்தி கொண்டிருக்க, அந்த பக்தியே சிந்தாமணி மீது பித்தாகத் திரிந்த பில்வமங்களை மாற்றி, ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் என்ற அற்புதமான பாடல் தொகுப்பை இயற்ற வைக்கிறது. இது ஒய்.வி. ராவ் இயக்கிய படம். பாபநாசம் சிவன் இசை. அக்காலத்தில் ஹரிதாஸுக்கு முன்னால் பிய்த்துக்கொண்டு ஓடிய படமாக சிந்தாமணி மாறியது.

ஹரிதாஸ்
ஹரிதாஸ்

சிந்தாமணிக்குப் பின் பெருவெற்றி அடைந்த திரைப்படம் எம்.கே. தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’. இன்றுவரை இனிமையான பாடல்களை உடையது. அதிலும் இதே பிரேக்கப் தான். ஆனால் இதில் அம்பலத்தரசனாக நடிக்கும் எம்.கே.டி தான் நாயகியை ப்ரேக்கப் செய்வார். காளியின் அருளால் பெரிய கவி ஆகிவிடுவார். அவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அருமையான படமாக எஸ்.எம். ராமுலு நாயுடு இயக்கினார். இதுவும் இளங்கோவனின் திரைக்கதையே. பாபநாசம் சிவனின் இசையில், ஜி. ராமநாதன் இசைக்கோர்ப்பை கவனித்துக்கொள்ள, இப்படத்தின் 29 பாடல்கள் ஓஹோ என்று அனைத்துப் பக்கமும் பரவின.

ஹரிதாஸ் (1944) பற்றிச் சொல்லவே வேண்டாம். 784 நாட்கள் ஓடி, இரண்டு தீபாவளிகளைக் கண்ட படம். பாபநாசம் சிவன், ஜி. ராமநாதன் ஆகியோரின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். இதுவும் ப்ரேக்கப் கதையே. தந்தை தாயைத் தனது மனைவிக்காகப் பிரிந்து, பின்னர் மனைவியை ஒரு நடனமாதுவுக்காகப் பிரிந்து, சொத்தையெல்லாம் அந்த நடனமாது ஏமாற்றி எடுத்துக்கொண்டபின் மனம் திருந்தும் ஹரிதாஸின் கதை இது. ரம்பா என்ற நடனமாதுவாக நடித்த டி.ஆர். ராஜகுமாரி பற்றி இதைப் படிப்பவர்கள் தங்களது தாத்தாக்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். ‘மன்மதன் லீலையை (மன்மத லீலையை அல்ல) வென்றார் உண்டோ’ பாடலில் வரும் பறக்கும் முத்தம் அக்காலத்தில் திரையரங்குகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கிய படம் இது. திரைக்கதை எழுதியவர், அக்காலத்து சூப்பர்ஸ்டார் திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவன்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் உச்சத்தில் இருந்தபோது வெளியான இன்னொரு ப்ரேக்கப் படம், கண்ணகி (1942). ஆர்.எஸ் மணி இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில் பி.யு. சின்னப்பா கோவலனாகவும் கண்ணாம்பா கண்ணகியாகவும் எம்.எஸ். சரோஜா மாதவியாகவும் நடித்தனர். கண்ணகி – கோவலன் கதையும் அனைவருக்குமே தெரியும். கண்ணகியை மாதவிக்காக கோவலன் பிரிய, கண்ணகி தனது விடாமுயற்சியால் கோவலனை மீண்டும் தன்னிடம் கொண்டுவர, அப்போது வறுமையால் தனது பொற்சிலம்பை விற்கச்சொல்லி கண்ணகி கொடுக்க, மன்னனோ அது தனது ராணியிடம் திருடியது என்று நினைத்துக் கோவலனை தண்டிக்க, வீறுகொண்டு எழும் கண்ணகி உண்மையை நிரூபித்து, மதுரையை எரித்து, மன்னனும் ராணியும் இறந்து, பின்னர் வானுலகம் செல்வாள் கண்ணகி. இந்தப் படத்துக்கும் இளங்கோவனே திரைக்கதை வசனம். அசோக்குமார் படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் சின்னம்மாவாக கண்ணாம்பா நடித்ததால் இந்தப் படத்தில் கோவலனாக பாகவதரைப் போட்டால் சரியாக இருக்காது என்று பி.யு. சின்னப்பாவைக் கோவலனாக நடிக்க வைத்தனர். போமன் இரானி இயக்கத் துவங்கிய இப்படத்தில் பின்னர் 22 வயதான ஆர்.எஸ் மணி இயக்குனராக மாற்றப்பட்டார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெருவெற்றி அடைந்த படம் இது.

1950 முதல் 1959 வரை

சரித்திர, புராணப் படங்களில் இருந்து தமிழ்ப்படங்கள் ஏராளமாக சமூகப் படங்களுக்கு மாறிய காலகட்டம் அது. இக்காலகட்டத்திலும் சரித்திரப் படங்கள் எடுக்கப்படாமல் இல்லை. ஆனால் சமூகம் சார்ந்த பிரச்னைகள் முதல்முறையாகப் பெருவாரியாகக் கதைகளில் இடம்பெற்ற காலகட்டம் இது.

தேவதாஸ்
தேவதாஸ்

காதல் கதைகளுக்கெல்லாம் மன்னன் என்று கருதப்பட்ட ‘தேவதாஸ்’ நாவலை, 1953இல் தெலுங்கிலும் தமிழிலும் வேதாந்தம் ராகவய்யா இயக்கினார். இதில் நாகேஸ்வர ராவும் சாவித்ரியும் தேவதாஸ் மற்றும் பார்வதியாக நடிக்க, பத்மினி, ராகினி, லலிதா சகோதரிகளில் லலிதா சந்திரமுகியாக நடித்தார். சி.ஆர். சுப்பராமன் இசை. விஸ்வநாதன் ராமமூர்த்தி பின்னணி இசை. எல்லாப் பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்படுமுன்னரே சி.ஆர். சுப்பராமன் இறக்க, மீதியிருந்த பாடல்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியே இசையமைத்தது. தேவதாஸ் கதை, ப்ரேக்கப் என்பதற்கு இன்றுவரை உதாரணமாகச் சொல்லப்படும் கதை. இன்றுவரை பல மொழிகளில் பல வடிவங்களில் எடுக்கப்பட்ட கதை. முதல்முறையாக வெளியாகும்போது எப்படி இருந்திருக்கும்? தெலுங்கு மற்றும் தமிழில் பெருவெற்றி அடைந்த திரைப்படமாக தேவதாஸ் மாறியது.

ஏற்கெனவே ஐம்பதுகளின் தொடக்கத்தில் மெல்லத் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த சி.வி.ஸ்ரீதர் (புதுமை இயக்குநர் என்று சித்ரா லட்சுமணனால் அன்புடன் குறிப்பிடப்படும் ஜாம்பவான் இயக்குநர்), முதல்முறையாகத் திரைப்பட இயக்கத்தில் குதித்த படமாக ‘கல்யாணப் பரிசு’ அமைந்தது. வெளிவந்த 1959இல் ஸ்ரீதருக்கு வயது வெறும் 26 தான். அந்த வருடத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்தது கல்யாணப் பரிசு. வழக்கமாக நீண்ட நீண்ட வசனங்கள் பேசாமல், இயல்பான அக்காலத்திய இளைஞர்கள் எப்படிப் பேசுவார்களோ அப்படி அமைந்த படம் இது. இதனாலேயே ஸ்ரீதரின் படங்கள் என்றால் இளைஞர்கள் கும்பல் கும்பலாகத் திரையரங்குகள் செல்லும் வழக்கம் பல வருடங்கள் நீடித்தது. அவருமே இளைஞராக இருந்த தால், தன்னைப்போன்ற இளைஞர்களை வைத்துக்கொண்டு சித்ராலயா யூனிட் என்ற ஒரு அற்புதமான யூனிட்டை உருவாக்கி, ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியிலும் முடிசூடா மன்னராகப் பல வருடங்கள் ஆட்சி செய்தார்.

கல்யாணப் பரிசு ஒரு அக்மார்க் ப்ரேக்கப் திரைப்படம். அக்காலத்தில் மிகப் புதுமையான கதைக்கரு அமைந்த படம். இரண்டு சகோதரிகள். அதில் ஒருத்தியான வசந்தி, நாயகன் பாஸ்கருடன் கல்லூரியில் படிப்பவள். பாஸ்கர் வசந்தியை விரும்புவான். ஆனால் அவனது காதலைச் சொல்கையில் வசந்தி கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்க, பாஸ்கர் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவான். வருத்தமடையும் வசந்தி பாஸ்கரைச் சந்திக்க, இருவருக்கும் காதல் ஏற்படும். அவர்களின் வீட்டில் இருக்கும் ஒரு காலி போர்ஷனில் பாஸ்கர் தங்கியிருப்பான். ஆனால் விதியின் விளையாட்டால் பாஸ்கர் மீது வசந்தியின் சகோதரி கீதாவுக்குக் காதல் வந்துவிடும். கீதா இதை வசந்தியிடம் சொல்ல, கீதா மீது பேரன்பு வைத்திருக்கும் வசந்தி, தனது காதலைத் தியாகம் செய்து கீதாவை பாஸ்கருடன் திருமணம் செய்து வைப்பாள். ஆனால் பாஸ்கரை அவளால் மறக்க முடியாது. இதனால் தன்னிடம் காதலைச் சொல்லும் தனது மேனேஜர் ரகுவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. பின்னர் பல திருப்பங்களுக்குப் பிறகு, பாஸ்கர் – கீதாவுக்கு ஒரு மகன் பிறப்பான். ஆனால் தனது சகோதரியின் காதலை கீதா தெரிந்துகொண்டு, கழிவிரக்கத்தால் இறந்துவிடுவாள். எப்படியாவது வசந்தியை நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று இறக்கும்போது சொல்லுவாள். பாஸ்கர், தனது குழந்தையுடன் வசந்தியைத் தேடி ஓட, ரகுவை வசந்தி இறுதியில் திருமணம் செய்துகொள்கிறாள் என்று பாஸ்கர் கேள்விப்படுவான். எப்படியாவது அங்கு சென்று இறந்த கீதா பற்றிச் சொல்லி, வசந்தியைச் சேரவேண்டும் என்று பாஸ்கர் செல்ல, அங்கே வசந்தியின் திருமணம் நடந்து முடிந்திருக்கும். ஒன்றுமே பேசாமல் தனது குழந்தையை வசந்திக்குக் கல்யாணப் பரிசாகக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து பாஸ்கர் செல்வதோடு கல்யாணப் பரிசின் கதை முடியும்.

இப்படி ஒரு கதை 1959இல் வெளிவந்து, கூடவே நல்ல திரைக்கதை, ஏம்.ராவினால் இசையமைக்கப்பட்ட இனிமையான பாடல்கள், நல்ல நகைச்சுவைக் காட்சிகள் என்று ஒரு பக்காவான வணிகப்படமாக உருவானால் எப்படி வெற்றியடையாமல் போகும்? இயக்கியவர் 26 வயது இளைஞர் வேறு. கல்யாணப் பரிசு சூப்பர்ஹிட் ஆகி, இன்றுவரை காதல் தோல்விப் படங்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்துவருகிறது.

1960 முதல் 1969 வரை

ஸ்ரீதர் இதற்குப் பின் எடுத்த வெண்ணிற ஆடை, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, அவளுக்கென்று ஓர் மனம், இளமை ஊஞ்சலாடுகிறது ஆகிய படங்களிலும் காதல், இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல், காதல் உடைவது, மறூபடியும் சேர்வது, தனித்து விடப்பட்ட நபர்கள் ஆகியோர் பற்றி நிறையப் பேசியிருப்பார்.

உதாரணத்துக்கு நெஞ்சில் ஓர் ஆலயத்தை எடுத்துக்கொள்வோம், கணவனே மனைவியிடம், தனக்கு சிகிச்சை செய்யப்போகும் மருத்துவர், அவனது மனைவியின் முன்னாள் காதலன் என்பதால், எப்படியும் அறுவை சிகிச்சையில் தான் இறந்துவிடுவேன் என்று சொல்லி, தான் இறந்தபின்னர் அவளது முன்னாள் காதலனான மருத்துவரைத்தான் தனது மனைவி திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்வதை ப்ரேக்கப் என்பது புழக்கத்துக்கு வராமல் இருந்த காலத்தில் வேறு எப்படி எடுத்துக்கொள்வது? இதை முற்றிலும் புதிய பாணியில் அமைந்த ப்ரேக்கப் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும்?

எனவே 1959 முதல் அறுபதுகள் முடியும்வரை காதல், அதிலேயே முக்கோணக் காதல், அதன் வேறு பல வகைகள் (ப்ரேக்கப் இதில் ஒரு அம்சம்) என்று காதலில் பரிசோதனைகள் செய்த ஸ்ரீதர் படங்கள் பிரமாதமாக ஓடின.

அறுபதுகளின் முடிவில் கே. பாலசந்தர் ‘இரு கோடுகள்’ திரைப்படத்தை எடுக்கிறார். இதுவும் ஒரு ப்ரேக்கப் படமே. நாயகன் வட இந்தியாவில் ஒரு பெண்ணை மணந்துகொள்வான். ஆனால் நாயகனின் தாய் இந்தத் திருமணத்தை எதிர்ப்பார். இதனால் இருவருக்கும் ப்ரேக்கப் ஆகிவிடும். அதன்பின் நாயகன் தென்னிந்தியா வந்து இன்னொரு திருமணம் செய்துகொள்வான். நாயகனை விட்டுப் பிரிந்த முதல் மனைவி கர்ப்பமாக இருப்பாள். அவளை யாருமே திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்று நினைத்து, அவள் தந்தை அவளை கலெக்டருக்குப் படிக்க வைப்பார். அந்தப் பெண்ணே கலக்டராக தென்னிந்தியா வரும்போது அவளது அலுவலகத்தில் கிளார்க்காக நாயகன் வேலை செய்துகொண்டிருப்பான். இதன்பின் எழும் குழப்பங்களே மீதிக்கதை. இந்தப் படத்திலும் கல்யாணப் பரிசு போல, நாயகனின் இரண்டாம் மனைவி, கலெக்டரான முதல் மனைவிக்கு, அவள் மகன் இறந்துவிட்டதால் தனக்கும் நாயகனுக்கும் பிறந்த மகனைப் பரிசாகக் கொடுக்கும் க்ளைமேக்ஸ் இருக்கும். கல்யாணப் பரிசிலும் ஜெமினி கணேசன். இரு கோடுகளிலும் ஜெமினி கணேசன். இரண்டிலும் குழந்தையை வைத்தே க்ளைமேக்ஸ்.

1970 முதல் 1979 வரை

1930்கள் முதல் 1960்கள் வரை தமிழ்ப்படங்களில் ஒரு குறிப்பிட்ட நிலை இருந்துவந்தது. துரோகம் (கண்ணகி), ஏழை பணக்கார வகுப்பு வித்தியாசம் (அம்பிகாபதி), தியாகம் (கல்யாணப்பரிசு), விதி (நெஞ்சம் மறப்பதில்லை), சாதி (மதுரை வீரன்), மரணம் (ஏராளமான படங்கள்) போன்ற வெளிப்புறக் காரணங்களே ஜோடிகளுக்கு இடையே நிகழும் பிரிதல் (ப்ரேக்கப்) என்பதற்குப் பெரும்பாலான காரணங்களாக இருந்தன. ஆனால் 1970்களின் துவக்கத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. என்னவென்றால், வெளிக் காரணங்கள் இல்லாமல், பெரும்பாலும் மனம் சார்ந்த உட்புறக் காரணங்களாலேயே பிரிவு ஏற்பட்டது. அப்போதும்கூட மேலே சொன்ன காரணங்கள் சில படங்களில் இடம்பெற்றாலும், பெரும்பாலான திரைப்படங்கள் மனம் சார்ந்த – ஈகோ, பக்குவமின்மை, உணர்வு சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை மையக்கருவாகக் கொள்ளத் தொடங்கின.

1970 முதல் 1979 வரை எடுக்கப்பட்ட பெரும்பாலான பாலசந்தர் படங்களை இந்த வகைகளில் அவசியம் பொருத்திவிடலாம். அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு ஆகியவை சில உதாரணங்கள். இந்தப் படங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், இருவருக்கு இடையே நிலவும் காதல், அன்பு என்பது எப்படியெல்லாம் மனம் சார்ந்த, உறவு சார்ந்த காரணங்களால் உடைபடுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். பாலசந்தர் இவற்றுக்குப் பின்னால் எடுத்த மரோ சரித்ரா (எக் தூஜே கே லியே), புன்னகை மன்னன், சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், டூயட் முதலிய எல்லாப் படங்களுமே உட்புறமான, மனம் சார்ந்த, உறவுகள் சார்ந்த, புரிந்துகொள்ளல் சார்ந்த பிரச்னைகளாலேயே கையாளப்படும்.

எனவே 1969 முதல் 1979 வரை பெரும்பாலான பாலசந்தர் படங்களை நாம் ப்ரேக்கப் என்பதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இந்தக் காலகட்டத்திலேயே பாரதிராஜா உள்ளே வந்து பதினாறு வயதினிலே எடுத்தாயிற்று. அதில் மயிலின் காதல் முதலில் மருத்துவருடன் உடையும். இதனை கிராமப் பின்னணியில் இயல்பாக எடுத்திருப்பார்.

ஆனால் இவர்களுடன் மறுபடியும் ஸ்ரீதர் இக்காலகட்டத்தில் போட்டி போடத் தவறவில்லை. எழுபதுகளில் அவர் எடுத்த ஓ மஞ்சு, அக்காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அதற்கான நடிகர் தேர்வு (டீன் ஏஜ் என்று சொல்லப்படும் வயதில் இருக்கக்கூடிய புதுமுகங்கள்) பற்றிப் பத்திரிகைகள் எழுதின. அந்தப் படத்தின் கதையே கொஞ்சம் வித்தியாசமானது என்றாலும் அந்தத் திரைப்படம் சரியாகப் போகவில்லை. இருந்தாலும் ஸ்ரீதர் விடவில்லை. ரஜினி கமலை வைத்து அவர் 1978இல் எடுத்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மிகப்பெரிய ஹிட் ஆனது. இதிலும் காதல், 70களில் நிலவிய இளைஞர்களின் காதல் பற்றிய புரிதல், ஏமாற்றங்கள், விட்டுக்கொடுத்தல்கள் என்று பல அம்சங்களைப் பேசியிருப்பார்.

1980 முதல் 1989 வரை

இந்தக் காலகட்டம், பொதுவாக ஆக்‌ஷன் படங்களின் காலம் என்றாலும், பாக்யராஜின் வளர்ச்சி, குடும்பம், காதல், பிரிதல் ஆகியவற்றில் புது ரத்தம் பாய்ச்சியது. 1981 ஜனவரியில் பாக்யராஜ் எடுத்த மௌன கீதங்களில், இயல்பான வாழ்க்கைத் தருணங்களில் வழுக்கிய ஒரு கணவன், தன்னை விட்டுப் பிரிந்த மனைவியிடம் எப்படிச் சேர்கிறான் என்பதை அனைவரும் உணர்ச்சிவசப்படும்படி எடுத்திருந்தார்.

1981 அக்டோபரில் வெளியான அந்த ஏழு நாட்களில் பாக்யராஜ், ப்ரேக்கப் என்பதற்கு ஒரு புதிய அர்த்தம் கொடுத்திருப்பார். மனைவியை அவளது காதலனுக்கு விட்டுக்கொடுக்க முன்வரும் கணவன், அந்தக் கணவனிடம் தனது பழைய காதலியை விட்டுக்கொடுக்கும் காதலன் என்று அந்தப் படம் ஒரு புதிய அம்சத்தை ஆடியன்சுக்குக் காட்டியது. அதன்பிறகு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்திலும் நாயகன் நாயகிக்கு இடையே ஒரு பிரச்னை உண்டாகி ப்ரேக்கப் வரும். ஆனால் அதை க்ளைமேக்ஸில் மிகவும் நகைச்சுவையோடு முடித்துவைத்திருப்பார். அதுவே முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊருக்கு வரும் நாயகனை விரும்பும் கிராமத்துப் பெண்ணுக்கும் நாயகனுக்குமான உணர்வு சார்ந்த உறவு நன்றாகக் காட்டப்பட்டிருக்கும்.

சின்ன வீடு திரைப்படம் ப்ரேக்கப் என்பதற்கு இன்னொரு உதாரணம். இதில் கணவன், தனக்குப் பொருந்தாமல் இருக்கும் மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணிடம் செல்வது பற்றிய திரைக்கதை அமைத்திருப்பார் (கண்ணகி திரைப்படம் போல). ஆனால் அதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பொதுவாகவே சமூகத்தில் பேசப்படும் பிரச்னைகள் பற்றியும் நிறைய இருக்கும். கூடவே மிகவும் வலுவான திரைக்கதை. எண்பதுகளின் இறுதியில் வெளியான ஆராரோ ஆரிரரோ, ஆண் பெண் உறவில் ஒரு புதிய அம்சத்தைக் காட்டியது.

இப்படி எண்பதுகள் முழுதும் பாக்யராஜின் ராஜ்ஜியமாக இருந்ததை யாரும் மறந்துவிடமுடியாது. பாலசந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர், விசு, ஆகியோர் தொடர்ந்து உறவுகள், ஜோடிகள், அவர்களுக்குள் இருக்கும் புரிதல் பிரச்னைகள் பற்றிய படங்கள் எடுத்துக்கொண்டே இருந்த காலகட்டம் இது. அவர்களில் பாக்யராஜின் படங்கள் தொடர்ந்து இதே கருவை வைத்துக்கொண்டு மிக வித்தியாசமாக வெளிப்பட்டு மக்களைக் கவர்ந்தன.

அதே சமயம் 1980இல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ திரைப்படம் தமிழ்நாடெங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. டி. ராஜேந்தரின் வித்தியாசமான ட்ரீட்மெண்ட் மக்களைத் தாக்கியது. இதுவும் ஒருவிதத்தில் ப்ரேக்கப் படமே. டி. ராஜேந்தரின் எண்பதுகளின் திரைப்படங்களும் காதல், உறவு சார்ந்த சிக்கல்கள் என்பவற்றை அவரது பாணியில் அணுகின. அவரது படங்களின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் போய்ச்சேர்ந்து பெரும் வெற்றி அடைந்தன. ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவைக் காத்த கிளி, மைதிலி என்னைக் காதலி, என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகிய டி. ராஜேந்தரின் படங்களில் முழுக்கவே உறவுகள் சார்ந்த பிரச்னைகள், பிரிதல்கள் என்பவையே பிரதானமாக இருக்கும். இந்த அத்தனை படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட்கள். இவற்றில் பெரும்பாலான படங்கள் மிக நன்றாக ஓடியவை.

இந்தக் காலகட்டத்திலேயே மணி ரத்னத்தின் வருகை, அவர் எடுத்த மௌன ராகம் திரைப்படம் என்பதைப் பற்றியும் பேசவேண்டும். மௌனராகத்தில் கையாளப்பட்ட உறவுச் சிக்கல்கள் அவசியம் குறிப்பிட வேண்டியவை. காதலன் மரணத்தால் மனம் உடையும் பெண், வேண்டா வெறுப்பாக இன்னொருவனைத் திருமணம் செய்துகொள்வதால் என்னென்ன சிக்கல்கள் இருவரின் மனதிலும் உருவாகின்றன என்பது பற்றிய சிறப்பான படமாக மௌனராகம் அமைந்தது.

அதேபோல் எண்பதுகளில் இயக்குநர் மகேந்திரன் பல அற்புதமான படங்களை எடுத்தார். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் வரும் ப்ரேக்கப் மறக்க முடியாதது. அது புரிதல் பிரச்னை சார்ந்தது. இறுதியில் விமான நிலையத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் இன்றுவரை மறக்க முடியாதது. மகேந்திரனின் ஜானி படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியான ரஜினிக்கு நடக்கும் ப்ரேக்கப் மிகுந்த உணர்ச்சிபூர்வமானது. மகேந்திரனின் நண்டு திரைப்படம் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு வட இந்திய வாலிபனின் பார்வையில் நிகழும் காதல் படம் அது. ஆனால் அதிலும் ப்ரேக்கப் சார்ந்த ஒரு ஆழமான சோகம் இருக்கும்.

1990 முதல் 1999 வரை

இந்தக் காலகட்டத்தில் விக்ரமன், வஸந்த் ஆகியவர்களின் வருகை, சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி ஏராளமான புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தது ஆகிய காரணங்களால் காதல் படங்கள் ஏராளமாக வெளியாகின. ஒவ்வொரு பத்தாண்டுகளும் ஒரு புதிய அம்சத்தைக் காதலில் புகுத்தியதுபோல, தொண்ணூறுகளின் காலகட்டம், பார்க்காமலேயே காதல், அவற்றில் பிரிதல் பிரச்னைகள், கேட்காமலேயே காதல், அவற்றில் வரும் பிரச்னைகள், நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிப்பது, அதில் வரும் சிக்கல்கள் போன்றவை திரைப்படங்களில் பெரும்பங்கு வகித்தன. காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற சிறப்பான படங்களை அகத்தியன் எடுத்த காலகட்டம். இக்காலத்தில் வெளியான பூவே உனக்காக, லவ் டுடே முதலிய படங்கள், காதலுக்கு ஒரு புதிய பரிமாணம் வகுத்தன. இவை இரண்டுமே ப்ரேக்கப் படங்களே. இரண்டும் வித்தியாசமானவை. எத்தனையோ வித்தியாசமான காதல் படங்கள் இக்காலகட்டத்தில் வெளியாயின. பல இயக்குநர்கள் ப்ரேக்கப்பில் புகுந்து விளையாடினர்.

பூவே உனக்காக
பூவே உனக்காக

2000 மற்றும் இன்றுவரை

2000த்தில் வெளியான மணி ரத்னத்தின் ‘அலை பாயுதே’ இன்றுவரை பேசப்படுகிறது. திருமணம் செய்துகொண்ட ஒரு இளம் தம்பதிக்குள் எழும் ஈகோ சார்ந்த பிரச்னைகளால் ப்ரேக்கப் நிகழ்ந்து, அதன்பின் இருவரும் எப்படி இணைந்தனர் என்பதை ஆர். செல்வராஜின் கதையோடு அருமையான திரைக்கதை அமைத்து ரஹ்மானின் இசையில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மணி ரத்னம் கொடுத்திருந்தார். அதே வருடத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவின் வருகையும் நிகழ்ந்தது. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் ப்ரேக்கப் சார்ந்த ஒரு மிக வித்தியாசமான பார்வையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் தான் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படம் வெளியானது. அதில் ஒரு நுணுக்கமான ப்ரேக்கப் சொல்லப்பட்டிருக்கும். பாலாஜி சக்திவேலின் காதல், கிருஷ்ணாவின் ஜில்லுனு ஒரு காதல், சசிகுமாரின் சுப்ரமண்யபுரம் ஆகியவை பிரிதல், துரோகம் சார்ந்த அழுத்தமான கதைகளைச் சொல்லின.

செல்வராகவனின் வருகை நிகழ்ந்ததும் இதே காலகட்டம்தான். அவரது 7ஜி ரெயின்போ காலனி படம் அத்தனை இளைஞர்களின் மனதிலும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் வரும் ப்ரேக்கப், வேறு பல படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது. அட்லியின் ராஜா ராணியும் இந்த ரீதியில் ஒரு வித்தியாசமான படமே. மறுபடியும் மணி ரத்னம் ஓகே கண்மணியை இந்தக் காலகட்டத்தில் எடுத்தார். அது லிவ் இன் என்று சொல்லப்படும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய பார்வையை முன்வைத்தது. அதிலும் காதலர்களுக்கு இடையே நிகழும் ப்ரேக்கப், அதன் பின்விளைவுகள் என்று விரிவாகக் காட்டியிருப்பார் மணி ரத்னம்.

ஆதலினால் காதல் செய்வீர் திரைப்படத்தில் காட்டப்படும் ப்ரேக்கப் எப்படிப்பட்டது? கண நேரத்தில் நிகழும் உணர்ச்சி வேகத்தில் ஒரு காதல் உருவாகி ப்ரேக்கப் ஆனால் அது பின்னால் வருபவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை ஆதலினால் காதல் செய்வீர் போல முகத்தில் அறைந்து சொல்லிய படங்கள் மிகக்குறைவே.

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் எப்படிப்பட்ட ஒரு கதையைச் சொல்லியது? இதில் காதலர்கள் இடையே ப்ரேக்கப் என்பதைவிட, சமுதாயமே இரண்டு பேரையும் எப்படியெல்லாம் பிரிக்கத் துடிக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக மாரி செல்வராஜ் சொல்லியிருப்பார். ஒருதலை ராகம் போன்ற ஒரு கருவை வைத்துக்கொண்டு 96 வெளியானது இந்தக் காலகட்டத்தில்தான். அதுவே 2026இல் வெளியான லவ் டுடே திரைப்படம், ஆழமான காதலையும் படிப்புக்காக ப்ரேக்கப் செய்யலாம் என்பதை உணர்த்தியது. டாடா, ஜோ, லவர் போன்ற படங்களில் வந்த காதல், ப்ரேக்கப் ஆகியவை இக்காலத்தில் நடக்கும் பிரச்னைகளைக் காட்டின. குறிப்பாக இப்போது toxic love என்று இருப்பதை லவர் காட்டியது.

1930 முதல் 2026 வரையிலான ப்ரேக்கப் சார்ந்த படங்களை விரிவாக அலசப் புகுந்தால் ஒரு தொடர்தான் எழுதவேண்டும். உண்மையில் இந்தக் கட்டுரைக்காக ப்ரேக்கப் சார்ந்த மொத்தம் 90 திரைப்படங்களை ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொறுக்கியெடுத்து வைத்திருந்தேன். ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக எழுதுவது மிகவும் கடினம் என்பதாலேயே இந்தக் கட்டுரையில் மிக முக்கியமான படங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனவே இதில் சில முக்கியமான படங்கள் விடுபடவும் செய்திருக்கலாம். அவற்றைக் கண்டுகொள்ளாமல், இந்தக் கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் விடுபட்ட படங்கள், இயக்குநர்கள் ஆகிய எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும் எனது நன்றிகள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com