சினிமாவும் கட்சிச் சின்னங்களும்

சினிமாவும் கட்சிச் சின்னங்களும்
Published on

1957 தேர்தலில் வாக்களிக்க (ஓட்டுப் போட என்பதே 1957இன் பாஷை) என் அம்மாவும் பக்கத்து வீட்டு அக்காக்களுமாக ஒரு காரில் புறப்பட்ட போது நானும் வருவேன் என்று அடம் பிடித்து காரில் தொற்றிக் கொண்டேன். அப்போது எனக்கு வயது ஏழு. அம்மாவுடன் நானும் ஒட்டிக் கொண்டே பூத்திற்குள்ளும் (வாக்குச் சாவடி)புகுந்து போய்  விட்டேன். அம்மா அங்கிருந்த ரெட்டைக் காளைச் சின்னம் ஒட்டியிருந்த பெட்டிகளில் மூன்று ஓட்டுச் சீட்டைப் போட்டாள். அப்போது திருநெல்வேலி இரட்டைத் தொகுதி. ஒவ்வொருவரும் இரண்டு எம்.எல்.ஏ ஓட்டுக்களும் ஒரு எம்.பி ஓட்டுமாக மூன்று ஓட்டுக்கள் போட வேண்டும். அம்மா `ரெட்டைக்காளைச் சின்னம்’(காங்கிரஸ் கட்சிக்கு உரியது) ஒட்டிய பெட்டிகளில் ஓட்டுப் போட்டாள். நான், `அம்மா ஒரு ஓட்டை ரோஜாப்பூ சின்னத்தில் போடு,’ என்றேன். `போடா’ என்று அதட்டி அமைதியாக்கி விட்டாள். 

அப்போதெல்லாம் எந்தச் சின்னம் கொண்ட பெட்டியில் அதிக ஓட்டுக்கள் விழுந்திருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர். ஆக, எழுத்தறிவு விகிதம் 16% ஆக இருந்த அந்தக் காலத்தில் சின்னங்களை வைத்து அடையாளம் காணுவது துவங்கினாலும், இப்போது அது 77% முதல் 80% வரை இருக்கும் காலங்களிலும் அதுவே  தொடர்கிறது. இன்றைக்கும் நாம் படங்களைப் பார்த்துத்தானே ஆண்கள் ஓய்வறை (ரெஸ்ட் ரூம்) எது பெண்கள் ஓய்வறை எது என்று கண்டு பிடிக்கிறோம்.

அப்போது  இரட்டைக்காளைச் சின்னம் காங்கிரஸ் கட்சியினுடையது. காங்கிரஸிற்கு சுதந்திரப் போராட்ட காலச் செல்வாக்கு அன்று வரை  மங்கியிருக்கவில்லை. 1957 தேர்தலிலிருந்துதான் தி.மு.க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துக் களம் இறங்கியது. 1957 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் சுயேச்சைகளாகவே போட்டியிட்டு அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டது. பதினைந்து இடங்களில் வென்றார்கள். 14%  வாக்குகள் வாங்கினார்கள். அதன் பின் வெற்றிச் சின்னம் உதய சூரியனையும் தி.மு.கவையும் பிரிக்க முடியவில்லை. அதே போல் சினிமாவையும் தி.மு.கவையும் பிரிக்க முடியாது. 1957 பொங்கலை ஒட்டி வெளி வந்த `சக்கரவர்த்தி திருமகள்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் உதய சூரியன். அது ’57 மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் தி.முகவுக்கு உதவிகரமாக இருந்தது என்பார்கள். 1958 இல் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தில் படத்தின் டைட்டில் தொடங்கும் முன்பே திமு.க கொடி பட்டொளி வீசிப் பறக்கும். அது எம்ஜியார் பிக்சர்ஸின் விளம்பரச் சின்னம். முதன் முதலில் திரையில் கட்சியின் கொடியைக் காண்பித்தவர்

எம்.ஜி.ஆர். அவரது இன்பக்கனவு நாடகமும் இப்படி தி.மு.க கட்சிக் கொடியுடனேயே ஆரம்பிக்கும். உலகம் சுற்றும் வாலிபனிலிருந்து அது அண்ணாதி.மு.க கொடியாக மாறியது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் அது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆரவாரத்தைக் கிளப்பியது. 1959இல் சென்னை (அப்போது மெட்ராஸ்)  மாநகரட்சியை தி.மு.க உதயசூரியன் சின்னத்தை வைத்தே வென்றது. இந்தக் கால கட்டத்தில் எந்தப் படத்திலும் ரெட்டைக்காளைச் சின்னத்தை காங்கிரஸோ அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ (சிவாஜி?) திரைப்படங்களில் காட்டவில்லை.

1960 இல் மன்னாதி மன்னன் படத்தின் ஆரம்பத்தில் ``அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா,” என்று எழுச்சி மிக்க குரலில் பாடிக் கொண்டு வரும் காட்சியில் எம்.ஜி.ஆர் அணிந்திருக்கும் உடையில், நெஞ்சில் சூரியன் படம் வரைந்திருக்கும். அந்தப் பாடல் ஒரு `வழிபாட்டு (cult song) பாடலாகவே மாறியது. 1962 பொங்கலுக்கு வெளிவந்த ராணி சம்யுக்தா படத்தில் ``இதழிரண்டும் பாடட்டும் இமையிரண்டும் மூடட்டும் உதயசூரியன் மலரும் போது உனது கண்கள் மலரட்டும்” என்று ஒரு தாலாட்டுப் பாடல் பிரபலம். 1962 தீபாவளிக்கு வெளியான விக்கிரமாதித்தன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், அரசனாக  வரும் பொழுதெல்லாம் நெற்றியில் உதயசூரியன் திலகத்தோடுதான் வருவார். `அதிசயம் இவனது அறிவு மயம்’ என்று விக்கிரமாதித்தனைப் புகழ்வதாக வரும் பாடலில் ``தொழும் பகலவனைச் சின்னம் கொண்டவனாம்” என்று வரிகளும் வரும்.

1964இல் `மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று பாடலிலேயே பிரச்சாரம் பண்ணுவார். 1966இல் வெளிவந்த `அன்பே வா’ திரைப்படத்தில் `உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ என்ற வரிகளை சென்ஸார் புதிய சூரியனின் பார்வையிலே என்று மாற்ற வைத்தது. ஆனால் படத்தில் நிஜ உதயசூரியனையே காண்பிப்பதால் மக்கள் மனதில் அது உதய சூரியனாகவே பதிந்தது. அதே போல் அதற்கு அடுத்து வந்த நான் ஆணையிட்டால் படத்திலும் ``உதய சூரியன் உன் வரவு இந்த உலகம் யாவுமே உன் உறவு” என்ற வரிகளையும் காங்கிரஸ் அரசின் சென்ஸாருக்காக புதிய சூரியன் என்று மாற்ற வேண்டி வந்தது. 1966இல் வெளிவந்த எஸ்.எஸ்.ஆரின் அவன் பித்தனா படத்தில், ``கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி,” என்றபாடலில் உதய சூரியன் பின்னணியில் எஸ்.எஸ்,ஆர் நடனமாடுவார். பாடலில் உதய சூரியன் போன்ற நேரடி வரிகள் வராது. 1960களின் ஆரம்பத்தில் தூங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசு 1966களில் விழித்துக் கொள்ள ஆரம்பித்ததோ என்னவோ. ஆனால் காலம் கடந்து, ``குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்” என்ற பட்டுக்கோட்டை பாடலுக்கிணங்க 1967இல் ஆட்சியை இழந்து விட்டது.

கட்சிக் கொடியையும் சின்னத்தையும் படங்களில் காண்பிப்பது எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்த எம்.ஜி.ஆர், தான் அ.தி.மு.கவை ஆரம்பித்த போது எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆன நிலைமையில், 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலையைச் சின்னமாகப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அதுவே தனக்கு நிரந்தரமான சின்னம் என்று மனதுக்குள் உறுதிப்படுத்திக் கொண்டு காரியத்தில் இறங்கினார். அதற்குச் சற்றே முன் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், படம் தொடங்கும் போதே தன் பட நிறுவனத்தின் சின்னத்தில் அண்ணா தி.மு.க கொடியையும் ``நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் “ என்னும் பாடலையும் வைத்தார். தொடர்ந்து `நேற்று இன்று நாளை’ போன்ற படங்களில் கட்சிக் கொடியைப் பொருத்தமான பாடல் வரிகளுக்கிடையில் காண்பித்து மனதில் பதிய வைத்தார்.

அவசர நிலைப் பிரகடனத்தை அனைத்து இந்தியாவும் எதிர்த்த போது எம்.ஜி.ஆர் அதை ஆதரித்து இந்திராவின் அன்புக்குப் பாத்திரமானார். அந்தத் தைரியத்திலேயே இரட்டை இலையை தனது சின்னமாக வாங்கி விட முடியும் என்று நம்பினார்.  1975இல் வந்த `இதயக்கனி’ படத்தில் அவர் தேயிலைத் தோட்ட அதிபராக வருவார். அந்த ஆலையின் சின்னமே (emblem) இரட்டை இலையும் அதன் மத்தியில் அண்ணாவும்தான். தேயிலைக் கொழுந்தைத்தான் கம்பெனியின் சின்னமாக வைத்தேன் என்று சென்ஸாரைச் சமாதானப் படுத்தலாம் என்ற எண்ணம்தான். அவசர நிலைக் காலத்தில் அவரது பல படங்களில் சண்டைக்காட்சிகளை வெட்டித் தள்ளிய சென்ஸார் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

1976இல் வந்த `நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் தனது மாளிகைக் கதவுகளில் இரட்டை இலையை ஒரு டிசைனாகக் காண்பிப்பார். அதே ஆண்டு வந்த `உழைக்கும் கரங்கள்’ படத்தில் தனது கைத்தடியிலேயே இரட்டை இலையைப் பொறித்து வைத்திருப்பார். அந்தக் கைத்தடியைப் பார்த்தாலே படத்தில் அவரது எதிரிகள் அஞ்சுவதாகக் காண்பிப்பார்கள்.

1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கூட்டணி வென்று விட அதன் பின் நடைபெற்ற  தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிச் சமன்பாடுகளே மாறி இரட்டை இலையுடன் இருந்த கட்சிகள் எல்லாம் அணிகள் மாறி கிட்டத்தட்ட தனியாகவே அது போட்டியிட்டு வென்றது. அடுத்து வந்த தேர்தல்களில், `கை’ சின்னம் பெற்ற இந்திரா காங்கிரஸ்காரர்கள் `நாட்டைக் காக்கும் கை இது வீட்டைக் காக்கும் கை’ என்ற எம்.ஜி.ஆர் படப்பாடலைப்  பயன் படுத்தினார்கள், ஆனால் எடுபடவில்லை. 

1977இல், முதல் சட்டமன்றத் தேர்தலில், அவருக்கு ஆல் இந்தியா ரேடியோவில் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட அரை மணிநேரத்தில் 25 நிமிடங்களே பேசினார். எல்லோரும் ஐந்து நிமிடத்தை வீணாக்கி விட்டாரே என்று யோசிக்கையில் சட்டென்று வாணி ஜெயராமின் கணீர் குரலில் `வாசலெங்கும் ரெட்டை இலைக் கோலமிடுங்கள்,’ என்று ஒரு பாடலைப் போட வைத்தார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகமெங்கும், எம்.ஜி.ஆரா கொக்கா என்பது போல ஒரு பிரகாசம், கை தட்டல், விசில், ஆரவாரம். பிம்பங்களைக் கட்டமைப் பதிலெல்லாம் அவர் கில்லாடி. எம்.ஜி ஆர் அளவிற்கு சினிமாவிலும் ஊடகங்களிலும் யாரும் சின்னங்களையோ பாடல்களையோ பயன் படுத்தவில்லை. அவருக்கு அவை பயன் பட்ட  அளவிற்கு வேறு யாருக்கும் பயன் படவுமில்லை. மற்றவர்கள் பயன்படுத்தத் தவறி விட்டார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com