கடன் நல்லது!

கடன் நல்லது!
Published on

எலான் மஸ்க், அமெரிக்காவில் உள்ள பிரபல தொழிலதிபர். இன்று அவரைத் தெரியாதவர் இருக்கமுடியாது. அதிபர் டிரம்புக்கு வலதுகரமுமாக இருப்பவர். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், எக்ஸ் தளம் ஆகியவற்றின் உரிமையாளர். அவர் இளமையில் தன் சகோதரருடன் இணைந்து ஒரு இணையதளத்தைத்தொடங்கினார். அதற்குப் பணம் தேவைப்பட்டபோது, தன் தந்தையிடம் கடனாகப் பெற்ற பணம் 28000 டாலர்கள். இந்த கடன் தொகையில் இருந்துதான் அவர் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராக ஆகி இருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நிறுவனமான ரிலையன்ஸை திருபாய் அம்பானி 1968-இல் தொடங்கியபோது அவரிடம் சொந்த சேமிப்பு 50,000 ரூபாய் இருந்தது. ஆனால் மேலும் பணம் தேவைப்பட்டது. அவருக்கு பிணையம் தர யாரும் இல்லை என்பதால் வங்கிகள் கடன் தர மறுத்தன. சிண்டிகேட் வங்கியின் தலைவரும் அரசியல்வாதியுமான டி ஏ பாய் , அம்பானியின் தொழில்திறனை மட்டும் நம்பி 2 லட்சம் ரூபாய், பிணையம் இன்றியே கடன் வழங்கினார்.

இதுபோல் கடன் வாங்கித் தொழில் தொடங்கி சாதித்தவர்கள் ஏராளமானோர். கடன் இன்றி தொழில் துறையில் எதுவும் அசையாது. கடன் கிடைக்காமல் பல தொழில் முனைவோர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதுதான் உண்மை நிலை. ஆனால் கடன் வாங்கிய தொகையை எதற்கு வாங்கினோமோ அதற்குப் பயன்படுத்தி உழைத்தால்தான் தொழில் வளரும். கடனைத் திருப்பி அடைக்கமுடியும். ‘சரியான நோக்கத்துக்கு வாங்கப்படும் கடனே நல்ல கடன். அது உங்களை பணக்காரர் ஆக்கும். அது இல்லாமல் வேறு நோக்கத்துக்கு வாங்கப்படும் கடன் உங்களை ஏழையாக்கும்’ என்று ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோஸ்கி கூறுகிறார். இவரது முக்கியத்தொழிலே கடன் வாங்கி வீடுகள் வாங்குவதுதான். அவற்றின் மூலம் வருமானம் பெறுவார். அதையே மேலும் அதே தொழிலில் முதலீடும் செய்வார். வருவாய் ஈட்ட உதவும் கடன்களையே அவர் நல்ல கடன் எனச் சுட்டிக்காட்டுகிறார்.

எல்லா பொருளையும் பற்றிப் பேசி இருக்கும் திருவள்ளுவர் இந்த கடன்களைப் பற்றிப் பேசி இருக்கிறாரா என்று திருக்குறளில் கரைகண்ட நண்பர் ஒருவரிடம் கேட்டோம். குறளிலும் சரி; சங்க இலக்கியங்களிலும் சரி; கடன் என்ற சொல் வருகிறது. ஆனால் அது கடமை என்ற பொருளில்தான் வருகிறது. பணத்தைக் கடன் வாங்கும் பொருளில் அல்ல. எந்த நூற்றாண்டில் கடன் இப்போதைய பொருள் இந்த சொல்லுக்கு ஏறியது என்பதை ஆராயவேண்டும் என்றார் அவர்.

ஆனால் செல்வத்தை நிர்வகிப்பது பற்றி அவர் ஏராளமாக சொல்லி இருக்கிறார்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை/ போகாறு அகலாக் கடை’ என்ற குறள் மட்டுமே போதும் என்று சுட்டிக்காட்டினார். எவ்வளவு குறைவாக வருமானம் வந்தாலும்போதும் அதைக் கொண்டு வாழ்ந்துவிடலாம். செலவு வருமானத்தை விடக் குறைவாக இருக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். வருமானத்தைத்தாண்டி செலவு செய்யும்போதுதான் அங்கே கடன்வருகிறது. வள்ளுவர் காலத்தில் கடன் காரர்கள் அதிகம் இல்லை போலிருக்கிறது! கிரெடிட் கார்டு தவணைகளுக்காகவும் வீட்டு ஈஎம்ஐகளுக்காகவும் மட்டுமே வாழ்வது மட்டுமே இன்று பலரின் கதையாக இருக்கிறது. அதே சமயம் இந்த கடன்களை தேவைக்கு ஏற்ப பெற்று வசதியாக வாழ்கிற கதைகளும் உள்ளன.

கடன் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்வு என்று நம் முன்னோர்கள் பலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் இன்று கடன் என்று முறைப்படுத்தப்பட்டு தனியார்களின் வசமிருந்து வங்கிகளின் கைக்கு மாறி, பல்வேறுவழிகளில் கடன் பெறுகிறவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி குடும்பத்துடன் மாண்டுபோகிற கொடூரங்களும் இருக்கின்றன. தமிழக அரசு தற்போதைய சட்டமன்றத் தொடரில்கூட கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலும் முறைசாராமல் தனியாரிடம் கூடுதல் வட்டிக்குக் கடன் வாங்கும் நலிவடைந்த பிரிவினரின் நிலை மோசமே. அந்த வலையிலிருந்து மீளவே முடியாது!

ஆங்கிலப் பொருளாதார அறிஞர் கியின்ஸின் கருத்து ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.

‘நீங்கள் வங்கியிடம் 100 பவுண்டுகள் கடன் வாங்கி இருந்தால் அது உண்மையில் உங்களுக்கு பிரச்னையான ஒன்றுதான். ஆனால் அதுவே பத்துலட்சம் பவுண்டுகள் கடன் வாங்கி இருந்தீர்கள் என்றால் அது வங்கிக்குத்தான் பிரச்னை!’’ மெஹுல் சோக்ஸி, நீரவ் மோடி ஆகிய பெயர்கள் உடனே ஞாபகத்துக்கு வருகின்றனவா?

இந்த இதழின் சிறப்புப் பக்கங்களில் கடன்களைப் பற்றிப் பேசுகிறோம். தனிநபர் கடன்கள், நாடு, மாநிலங்களின் கடன்கள், வங்கி நடைமுறைகள் போன்றவை பேசப்படுகின்றன. ஆனாலும் ஓரளவுக்குத்தான் தொகுக்க முடிந்திருக்கிறது. ஏனெனில் கடன் என்பது கரைகாண முடியாத கடல்! தற்கால சூழ்நிலையில் பொறுப்பான முறையில் கடன் வாங்கினால் அது தூக்கிவிடும்! பொறுப்பின்மையுடன் நடந்துகொண்டால் மூழ்கி விட வேண்டியதுதான்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com