சிறுமியாக இருந்த போது வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டே இருப்பேன். தம்பியும் பின்னாலே ஓடி வருவான். பக்கத்தில் இருக்கும் பெரியப்பா வீடுகள், நடுவில் இருக்கும் முற்றம், முருங்கை மரம் வளர்ந்து நிற்கும் குறுகலான நடைபாதை என்று எங்கும் எங்கள் ஓட்டம்தான். பாட்டி தினமும் திட்டுவார் `ஏண்டி உனக்கு நடக்கவே தெரியாதா? எதுக்கு இப்படி தலதெறிக்க ஓடுற? உங்க சுகுணாக்காவைப் பாரு, எப்படி மெதுவா தரை அதிராம நடந்து போறா. அவதான் பொண்ணு’ என்பார். தம்பியை ஒன்றும் சொல்ல மாட்டார். அவன் `ஆம்பளப் புள்ளையாம்!’ அந்த நேரத்தில் பாட்டியை அலட்சியப்படுத்திவிட்டு ஓடினாலும், `அப்போ நான் பெண் இல்லையா? ஏன் எனக்கு நடக்கவே வரமாட்டேங்குது. காலை எடுத்து வச்சாலே ஓடத்தான் வருது’ என்று உள்ளுக்குள் குமைவேன். இரட்டைப் பின்னல் போட்டு, மல்லிகைச் சரம் சூடி, நேர்த்தியாக தாவணி அணிந்து, நளினமாக நடந்து போகும், பெரியப்பாவின் மகள் சுகுணாக்காவை வாய்பிளந்து பார்ப்பேன். பெண் என்றால் அடக்க ஒடுக்கமாக நடக்கணும். திடுதிடுவென ஓடும் நானெல்லாம் பெண்ணே இல்லை என்று தீர்மானமாக நம்பினேன். வாழ்க்கையில் `நடை’யைப் பற்றிய என் அறிமுகம் இப்படித்தான் தொடங்கியது.
வளர வளர உடற்பயிற்சி பற்றி பெரிய புரிதலோ, செய்ய வேண்டும் என்ற எண்ணமோ வந்ததில்லை. கீழ்நடுத்தர வர்க்க குடும்பம் என்பதால் எங்கு போனாலும் நடந்து போவது, பஸ் பிடிக்க விரைவது என்று இயல்பாகவே `நடை’ அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிப் போனது. எதையும் விரைந்து முடிக்க வேண்டும் என்ற குணத்தால், உடன்வருபவர்களைப் பற்றி எண்ணாமல், வேகமாக நடப்பேன். என்னவோ அதில் ஒரு பெருமை! இதற்காகவே இணையரிடமும், தோழிகளிடமும் அவ்வப்போது திட்டு வாங்குவேன்.
நாற்பது வயதை எட்டும்போதுதான் உள்ளுக்குள் இருக்கும் மலையேற்ற ஆசைக்கு மதிப்பளித்து `டிரெக்கிங்’ போகத் தொடங்கினேன். அதற்கான உடல்தகுதியை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் நடைப்பயிற்சியையும் ஆரம்பித்தேன். ஆனால், சின்ன வயதிலிருந்து ஓடியே பழகியதால் ஓட ஆசைப்பட்டேன். சிறுமியாக இருந்த போது பார்த்த `வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி செய்யும் சாகசங்களைவிட, டிரெக்பாண்ட் டீ-சர்ட்டில், தலைக்குப் பின்புறம் போனிடெய்ல் பறக்க, காலில் ஷூவுடன் கம்பீரமாக அவர் பாலத்தில் ஓடும் காட்சிதான் ரொம்பவும் பிடித்தது. அதேபோல் ஓடவேண்டும் என்பது என் கனவு.
அப்போது நானும், இணையரும் மதுரையில் வசித்தோம். சென்னையில் மாரத்தான் நடைபெற்ற செய்தியை டி.வி.யில் பார்க்கும்போதெல்லாம் நானும் ஓடவேண்டும், அதற்காகவே சென்னை மாநகரில் குடியேற வேண்டும் என்று மனத்திற்குள் குழந்தைத்தனமான ஆசை வந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பணி மாற்றல் காரணமாக சென்னை வந்துவிட்டோம். வந்து நான்கைந்து ஆண்டுகளானாலும் ஏனோ ஓடுவதற்கு தைரியம் வரவில்லை. இனம்புரியாத தயக்கம்.
வெளிநாட்டில் வசிக்கும் தம்பி, சில மாத விடுப்பில் சென்னை வந்திருந்தார். சென்னை மாரத்தான் ஓடப்போவதாகச் சொன்னார். ஆஹா! எனக்கு இறக்கை முளைத்தது. ஒரு வழியாக நீண்டகால ஆசையை நிறைவேற்றத் துணிந்தேன். தம்பியின் வழிகாட்டுதலில் மூன்று மாதம் பயிற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ஓடத் தொடங்கினேன். மனத்தடையும், தயக்கமும் விலகியது. சென்னை சாலைகளில், சற்றே விடிந்திருக்கும் அதிகாலைப் பொழுதுகளில், தனியாக ஓடுவது மிகவும் பிடித்தது. ஓட்டம் பழகிப் போனது. 2013 டிசம்பரில் சென்னை மாரத்தானில் 10 கிலோ மீட்டர் ஓடிய நாள் இன்றும் பசுமையாக நினைவிலிருக்கிறது. சாலைகளில் மக்கள் வெள்ளம். பெண்களும், ஆண்களும் அனைத்து வயதிலும் தயக்கமின்றி ஓடியதும், வேகமாக நடந்ததும் கண்கொள்ளாக் காட்சி. அவர்களுடன் நானும் ஓடியது சந்தோசமான தருணங்கள். அந்த காலைப்பொழுது அளித்த உற்சாகம் அளவிலாதது. ஏதோ பெரிய சாதனை செய்தது போன்ற உணர்வு !
ஆம், என்னைப் பொருத்த அளவில் அது பெரும்சாதனைதான். சின்ன வயதிலிருந்தே ஓடக்கூடாது, அடக்கஒடுக்கமாக நடக்க வேண்டும் என்று குடும்பமும், சுற்றமும் கட்டாயப்படுத்தியதால், சுருங்கிப் போயிருந்த ஒரு பெண் தன் இயல்பையும், ஆளுமையையும் மீட்டெடுத்த நாள் அது.
ஏன் ஓடுவது எனக்குப் பிடிக்கிறது என்று பலமுறை என்னையே கேட்டிருக்கிறேன். ஓட்டத்தை உடற்பயிற்சியாகப் பார்க்கிறேனா? உடலை வலிமையாக்குவதுதான் என் நோக்கமா? இல்லை, அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உடல்ரீதியாக, உணர்வுரீதியாக ஒடுக்கிவைக்கப்பட்டதற்கு எதிர்வினையாக ஓட்டத்தைக் கருதுகிறேன். ஓடும் போது கிடைக்கும் சுதந்திர உணர்வு அற்புதமானது. பொங்கி வழியும் வியர்வை, முகத்தில் மோதும் மெல்லிய காற்று, இளம்வெயில், சாலையோரத்தில் தலையாட்டும் மரங்கள், அவ்வப்போது கடந்து போகும் வாகனங்கள், எதிர்படும் மனிதர்கள் என்று ஓட்டம் தரும் அனுபவம் அலாதியானது. ஷூ தரையில் படும்போதெல்லாம் எதையோ வெற்றி கண்ட உணர்வு வருகிறது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓடுகிறேன். கிட்டத்தட்ட ஐம்பது மாரத்தான்களில் பங்கேற்றிருக்கிறேன். ஆரம்பத்தில் 10 கிலோ மீட்டரில் ஆரம்பித்து, அப்புறம் 21.1 கிலோ மீட்டர் (Half-Marathon) ஓடிவருகிறேன். 32.1கி.மீ. (20-mile run) ஓடிய அனுபவமும் உண்டு. சில ஆண்டுகளாக நானே வடிவமைத்த கறுப்பு நிற டி-ஷர்ட் அணிந்து, மாரத்தான் ஓடுகிறேன். டி-ஷர்ட்டின் முன்புறம் அறிவாசான் பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களும், முதுகுப்பகுதியில் `சாதி ஒழியாமல் சமூகவிடுதலை இல்லை’ என்ற வாசகமும் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஐந்தாறு பேராவது வந்து, `உங்க டி-ஷர்ட் நல்லா இருக்கு’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். `நானும் சமூகநீதி உணர்வாளன். உங்களுடன் படம் எடுத்துக் கொள்ளலாமா?’ என்று செல்ஃபி எடுப்பவர்களும் உண்டு. `மாரத்தானில் இப்படி ஒரு டி-ஷர்ட் அணிவதை நான் பார்த்ததில்லை’ என்று சிலர் வியப்பார்கள். `ஏன் அணிந்தால் என்ன?’ என்ற கேள்வியுடன் புன்னகைத்துக் கடப்பேன். சில நிகழ்வுகள் இப்படித்தான் இருக்கும், இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற பொதுப்புத்தி பெரும்பான்மையினரிடம் இருக்கிறது. மாரத்தான் ஓடும்போது ஏற்பாட்டாளர்கள் தரும் டி-ஷர்ட்டை பலர் அணிந்திருப்பார்கள், தமது குழு டி-ஷர்ட்டை சிலரும், உடல்நலன், உடற்பயிற்சி, மனஉறுதி, ஓட்டம் தொடர்பான மேற்கோள்கள் அச்சிட்ட டி-ஷர்ட்களை சிலரும் போட்டிருப்பார்கள். ஆனால், சமூக நீதிக்கான டி-ஷர்ட்டை யாரும் மாரத்தானில் அணிந்து நான் பார்க்கவில்லை. சமத்துவக் கோட்பாட்டைப் பரவலாக்க, அதை இயல்பானதாக்க (Normalise) இங்கும் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.
வழக்கமாக பெண்களிடம் சொல்லப்படும் உடற்பயிற்சி ஆலோசனை `வீட்டிலேயே யோகா செய்யலாமே?’ என்பதுதான். யோகா நல்ல பயிற்சி, அதில் எனக்கு மாற்று கருத்தில்லை. ஆனால், பெண்ணின் வெளி வீடு என்பதாக சுருங்கிவிடக்கூடாது. வீட்டுக்கு வெளியிலோ, அருகிலுள்ள பூங்கா, கடற்கரை, மைதானத்திலோ, வெளிக்காற்றை சுவாசித்து, வானத்தை, செடிகொடிகளை, எதிர்படும் மனிதர்களைப் பார்த்தவாறு பத்து நிமிடங்களாவது நடங்கள் என்பது தோழிகளுக்கு நான் சொல்லும் ஆலோசனை. இது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். பக்கத்து வீட்டுத் தோழி அப்படி ஆரம்பித்து, இன்று தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறார். அவரது ஆளுமையே மாறிவிட்டது. மனச்சோர்வுடன் இருந்தவர் இன்று உற்சாகமாக வலம்வருகிறார். சுரிதார், துப்பட்டாவுடன் செருப்பு போட்டு நடந்தவர், இன்று தனக்கான ஷூ, டிரெக் பாண்ட், டி-ஷர்ட் வாங்கி கம்பீரமாக நடைபோடுகிறார்.
எப்படி ஓடுவது என்று கேட்பவர்களிடம், முதலில் நடக்க ஆரம்பியுங்கள் என்பேன். சில நாட்களுக்குப் பிறகு, நடையின் ஊடாக சில அடிகள் ஓடுங்கள்; திரும்பவும் நடங்கள்; பிறகு சிறிது தூரம் ஓடுங்கள்... இப்படி பயிற்சி செய்தால் தொடர்ச்சியாக சில நிமிடங்களுக்கு ஓட முடியும். ஓடும் நேரத்தையும், தூரத்தையும் படிப்படியாக அதிகரிக்கலாம்.
நடப்பதையும், ஓடுவதையும் `தன் நேசம்’ (self-love) என்றே நான் கருதுகிறேன். நம் மகிழ்ச்சிக்காக, நலனுக்காக நாமே செய்யும் விசயம். எங்கள் காலனியில் புதியாக குடிவந்த தோழி ஒருவர், காலையிலும், மாலையிலும் சளைக்காமல் நடப்பார். வெயில் மழை எதையும் பொருட்படுத்தமாட்டார். அவரைப் பார்த்தாலே `ஐய்யய்யோ, இன்று ஓடவில்லையே’ என்ற குற்றவுணர்வு வரும்; மாலையில் ஓடிவிடுவேன். நடக்க சோம்பல்படும் எதிர்வீட்டுத் தோழியிடம், அவரைத்தான் `தன் நேசத்திற்கு’ உதாரணமாகக் காட்டுவேன். ஒரு நாள் அவர் நடக்கும்போது, நானும் எதிர்வீட்டுத் தோழியும் சேர்ந்து கொண்டோம். `சூப்பர்பா ! இரண்டு வேளையும் சளைக்காம நடக்கறீங்க. இதுதான் செல்ஃப்-லவ். சிலர் பத்து நிமிசம் நடக்கக் கூட சலிச்சுக்கறாங்க’ என்று எதிர்வீட்டைக் குத்த, அவர் என்னை முறைத்தார். புதுத்தோழி `அப்படியெல்லாம் இல்லப்பா. நான் நடக்கலைன்னா எம் பொண்ணு சைக்கிள் ஓட்ட மாட்டா. அவளை ஓட்ட வச்சு, எக்சர்ஸைஸ் பண்ண வைக்கனும்னுதான் நான் இரண்டு நேரமும் நடக்கறேன்’ என்று அருகிலுள்ள குட்டிப் பொண்ணைக் காட்டினாரே பார்க்கலாம். எதிர்வீட்டுத் தோழி என்னைப் பார்த்தாரே ஒரு பார்வை ! வானத்தைப் பார்த்தவாறு முகத்தில் வழிந்ததைத் துடைத்துக் கொண்டேன்.
( கீதா இளங்கோவன்,
எழுத்தாளர், திரை இயக்குநர்)
ஏன் ஓடுவது எனக்குப் பிடிக்கிறது என்று பலமுறை என்னையே கேட்டிருக்கிறேன். ஓட்டத்தை உடற்பயிற்சியாகப் பார்க்கிறேனா? உடலை வலிமையாக்குவதுதான் என் நோக்கமா? இல்லை, அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உடல்ரீதியாக, உணர்வுரீதியாக ஒடுக்கிவைக்கப்பட்டதற்கு எதிர்வினையாக ஓட்டத்தைக் கருதுகிறேன். ஓடும்போது கிடைக்கும் சுதந்திர உணர்வு அற்புதமானது. பொங்கி வழியும் வியர்வை, முகத்தில் மோதும் மெல்லிய காற்று, இளம்வெயில், சாலையோரத்தில் தலையாட்டும் மரங்கள், அவ்வப்போது கடந்து போகும் வாகனங்கள், எதிர்ப்படும் மனிதர்கள் என்று ஓட்டம் தரும் அனுபவம் அலாதியானது. ஷூ தரையில் படும்போதெல்லாம் எதையோ வெற்றி கண்ட உணர்வு வருகிறது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓடுகிறேன். கிட்டத்தட்ட ஐம்பது மாரத்தான்களில் பங்கேற்றிருக்கிறேன்.
ஆரம்பத்தில் 10 கிலோ மீட்டரில் ஆரம்பித்து, அப்புறம் 21.1 கிலோ மீட்டர் (Half-Marathon) ஓடிவருகிறேன். 32.1கி.மீ. (20-mile run) ஓடிய அனுபவமும் உண்டு. சில ஆண்டுகளாக நானே வடிவமைத்த கறுப்பு நிற டி-ஷர்ட் அணிந்து, மாரத்தான் ஓடுகிறேன். டி-ஷர்ட்டின் முன்புறம் அறிவாசான் பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களும், முதுகுப்பகுதியில் `சாதி ஒழியாமல் சமூகவிடுதலை சாத்தியம் இல்லை’ என்ற வாசகமும் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஐந்தாறு பேராவது வந்து, `உங்க டி-ஷர்ட் நல்லா இருக்கு’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். `நானும் சமூகநீதி உணர்வாளன். உங்களுடன் படம் எடுத்துக் கொள்ளலாமா?’ என்று செல்ஃபி எடுப்பவர்களும் உண்டு. வழக்கமாக பெண்களிடம் சொல்லப்படும் உடற்பயிற்சி ஆலோசனை `வீட்டிலேயே யோகா செய்யலாமே?’ என்பதுதான். யோகா நல்ல பயிற்சி, அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பெண்ணின் வெளி வீடு என்பதாக சுருங்கிவிடக்கூடாது. வீட்டுக்கு வெளியிலோ, அருகிலுள்ள பூங்கா, கடற்கரை, மைதானத்திலோ, வெளிக்காற்றை சுவாசித்து, வானத்தை, செடிகொடிகளை, எதிர்ப்படும் மனிதர்களைப் பார்த்தவாறு பத்து நிமிடங்களாவது நடங்களேன் என்பது தோழிகளுக்கு நான் சொல்லும் ஆலோசனை. இது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். பக்கத்து வீட்டுத் தோழி அப்படி ஆரம்பித்து, இன்று தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறார். அவரது ஆளுமையே மாறிவிட்டது. மனச்சோர்வுடன் இருந்தவர் இன்று உற்சாகமாக வலம்வருகிறார். சுரிதார், துப்பட்டாவுடன் செருப்பு போட்டு நடந்தவர், இன்று தனக்கான ஷூ, டிராக் பாண்ட், டி-ஷர்ட் வாங்கி கம்பீரமாக நடைபோடுகிறார்.
எப்படி ஓடுவது என்று கேட்பவர்களிடம், முதலில் நடக்க ஆரம்பியுங்கள் என்பேன். சில நாட்களுக்குப் பிறகு, நடையின் ஊடாக சில அடிகள் ஓடுங்கள்; திரும்பவும் நடங்கள்; பிறகு சிறிது தூரம் ஓடுங்கள்... இப்படி பயிற்சி செய்தால் தொடர்ச்சியாக சில நிமிடங்களுக்கு ஓட முடியும். ஓடும் நேரத்தையும், தூரத்தையும் படிப்படியாக அதிகரிக்கலாம்.
(கீதா இளங்கோவன், எழுத்தாளர், திரை இயக்குநர்)