
இதைப் படிக்கிற உங்களுடைய வயது எனக்குத் தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல. குறைந்தது, நான்கு தசாப்தங்களுக்கு முன்னால் செய்தித்தாள்கள்தான். அதையும் வீட்டில் அனைவரும் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. குடும்பத் தலைவர் படிக்கலாம்.
ஓரிரு தசாப்தங்களுக்குப் பிறகு? தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தன. காலை எட்டு மணி, இரவு 8 மணி என இரண்டு செய்தி வாசிப்புகள்தான். சிலர் இரண்டையும் கேட்பார்கள். வேறு சிலர் காலை அல்லது மாலையில் மட்டும் கேட்பார்கள்.
24 மணி நேரமும் செய்திகள் சொல்லும் சேனல்கள் வந்தபிறகும் சில தீவிர அரசியல் நோக்கர்கள் தவிர மற்றவர்கள் அந்தச் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பதில்லை.
ஆனால் தற்போதைய நிலை?
ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர் கையிலும் அலைபேசி. அதில் தொலைக்காட்சி, ஊடகங்கள் தவிர, சமூக ஊடகங்கள். முகநூல் மட்டுமல்ல. யுடியூப், ரீல்ஸ் வழியாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பல்வேறு வகையான செய்திகள், தகவல்கள்.
அவர்கள் அதைத் தேடவில்லை. வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனாலும் அது வந்து சேர்கிறது. அவற்றில் முக்கியமானது, தங்கத்தின் விலை. கடந்த ஓராண்டாக உடன் அதன் தம்பி, வெள்ளி விலையும். போதாததற்கு பங்குச் சந்தை பரஸ்பர நிதிகள் வேறு.
ஆங்கிலத்தில் ‘இன்ஃபர்மேஷன் ஓவர் லோடு' என்பார்கள். அப்படி வெள்ளமெனத் தகவல்கள். தேவையோ தேவையில்லையோ, சரியானவை மட்டும் அல்ல. தவறானவையும். கூடவே யூகங்களும், அச்சுறுத்தல்களும்.
பல பேருக்கு வேலை இல்லை. அவர்களுக்கு வருமானம் வேண்டியிருக்கிறது. வேண்டாம் என்று தவிர்க்க முயல்கிறவர்களையும், தொடர்பு இல்லாத அச்சமூட்டும் தலைப்புகளை வைத்து ‘வா, திற, என்னைப் பார்’ என உள்ளே இழுப்பார்கள்.
என்ன சொல்ல வருகிறேன்?
தேவைக்கு அதிகமான தகவல்கள் வந்து மக்களை அவர்களுடைய முதலீட்டு விடயங்களில் குழப்புகிறது. அவ்வளவுதான்.
இப்படி அடிக்கடி எதையாவது காதில் வாங்கி, தாங்கள் செய்து கொண்டிருக்கிற முதலீடுகளை மக்கள் மாற்றுகிறார்கள். மேல் தகவல்கள் வருகிற போது இன்னும் ஒரு முறை மாற்றுகிறார்கள்.
ஒரு டம்ளரில் சூடான பால் இருக்கிறது. அதை அடுத்தடுத்து ஒவ்வொரு டம்ளராக ஏழு, எட்டு டம்ளர்களுக்கு மாற்றினால் என்ன நடக்கும்?
பாலின் சூடு குறையும் என்பது வெளிப்படை. உபரியாக கூடவே மற்றொன்று நடக்கும். அது, பாலின் அளவு குறைவது. ஆம். பிறகு? ஒவ்வொரு குவளையிலும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு விடும் அல்லவா.
முதலீடுகளைத் தொடர்ந்து மாற்றி மாற்றி செய்கையில், தரகர் கட்டணம், பல வரிகள் என்ற வகைகளில் பணம் கரைகிறது.
சிலருக்கு நிதி தொடர்பான விடயங்களில் அதிக பழக்கம் இல்லாத காரணத்தினால், சில சொற்களை அவற்றின் பொருள் தெரியாமல் மாற்றி புரிந்துகொள்வார்கள், பயன்படுத்துவார்கள்.
சிக்கனம், சேமிப்பு, முதலீடு ஆகிய மூன்றும் வேறு வேறு என்று பலருக்கு தெரியாது.
கிடைக்கிற வருமானத்தில் ஓரளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் செலவுகளை பார்த்து பார்த்து தேவையானதற்கு மட்டும் செய்வது சிக்கனம். இது முதலீட்டைப் பெருக்குவதில் முதல் படி.
சிக்கனமாக இருந்தால் போதாது. வருமானத்தில் ஒரு பகுதியை மீதம் செய்து சேமிக்க வேண்டும். இது இரண்டாவது படி.
மூன்றாவதுதான் முக்கியமானது. சேமிப்பு மட்டுமே ஒருவரை பணக்காரர் ஆக்கிவிடாது.
பணத்தைப் பெருக்குவதற்கு அதற்கு நல்ல துணை தேவை. அந்தத் துணையின், தோழனின் பெயர் காலம். ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய தங்கம், சில ஆண்டுகளில், பத்தாயிரம் ஆகி, இன்னும் சில ஆண்டுகளில் லட்சம் ஆகி விடுகிறது.
அதே எடை கொண்ட தங்கம்தான். அதன் அளவில் மாற்றம் இல்லை. ஆனால், மதிப்பில் மாற்றம். அது கால ஓட்டத்தில் ஏற்பட்ட கூடுதல் மதிப்பு.
லட்ச ரூபாய்க்கு போட்ட வைப்பு (டிப்பாசிட்) ஏழு, எட்டு ஆண்டுகளில் 2 லட்சம். எதுவும் செய்யாமலே. காலம் செய்த (நல்ல) கோலம்.
நிலத்தின் விலை குறித்து கேட்கவே வேண்டாம். சில ஆண்டுகளுக்கு முன் சதுர அடி ஐம்பது ரூபாய்க்கு வாங்கியதெல்லாம், இப்போது 1500 ரூபாய். ஆண்டுகள் ஓடி விலை, பறந்துவிட்டது.
ஆக, சேமித்த பணத்தை முதலீடு செய்து காத்திருப்பவர்களுக்கு பணம் பெருகி, அதிகமாகி விடுகிறது.
மேலே பார்த்தது போல இருக்கும் பல்வேறு வாய்ப்புகளில் ஏதாவது சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பணத்தை முதலீடு செய்யலாம். செய்த முதலீட்டை விட்டுவைக்க வேண்டும். அந்தச் செடி, வேர் பிடித்து, வளர நாம் அனுமதிக்க வேண்டும்.
‘எதையும் சரியாக செய்யத் தெரியாத குரங்கே’ என்று ஒரு குரங்கிடம் சொல்லி கேலி செய்ய, ‘அப்படியா சொல்கிறீர்கள்? ஏதாவது ஒன்றைக்கொடுத்துப் பாருங்கள். செய்து காட்டுகிறேன்’ என்று ஒரு புத்திசாலி குரங்கு சொல்லியதாக ஒரு கதை.
ஒரு சிறிய செடியை அதனிடம் கொடுத்து, ‘இதை நீ நட்டு, வளர்த்துக் காட்டு பார்ப்போம்’ என்று சொல்ல, ‘இது என்ன பிரமாதம்! நான் செய்கிறேன்’ என்று நட்டு விட்டு அதன் அருகில் அமர்ந்து கொண்டது குரங்கு .சில நிமிடங்கள் ஓடியது.
‘அட! இந்த குரங்கு வித்தியாசமானதுதான் போல. வளர்த்து காட்டி விடுமோ!!' என்று கொடுத்தவர் நினைக்க, அடுத்து, நட்ட செடியை மண்ணிலிருந்து பிடுங்கி, சற்று தள்ளி வைத்து உற்றுப் பார்த்ததாம் குரங்கு.
‘அடடா! என்ன செய்கிறாய்?"என்று அவர் பதற, "ஒன்றுமில்லை செடி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்த்தேன்’ என்று சொல்லியிருக்கிறது குரங்கு.
முதலீடுகளும் அப்படித்தான். தேர்ந்து, தெளிந்து முதலீடு செய்து விட்டால், அதை வளர அனுமதிக்க வேண்டும்.
ஒருவர் லட்ச ரூபாய் பணத்தை பிறந்த மகள் பெயரில் வங்கி வைப்பில் போடுகிறார். ஆண்டுக்கு எட்டு சதவீதம் வட்டி. ஒவ்வோர் ஆண்டும் அந்த வட்டியை வாங்கிக் கொள்கிறார். மகளுக்கே அந்தப் பணத்தைச் செலவு செய்கிறார்.
மற்றொருவர் அதேபோன்ற லட்ச ரூபாய் பணத்தை அவர் மகள் பெயரில் வங்கி வைப்பில் போடுகிற பொழுது, ‘ரீ இன்வெஸ்ட்மென்ட்' என்று சொல்கிறார். வட்டியை வாங்கிக்கொள்ள வில்லை.
16 ஆண்டுகள் ஓடி விடுகிறது. முதல் வகையினருக்கு அந்த லட்ச ரூபாய் திரும்ப கிடைக்கும். அவை வைப்பாகப் போட்ட அதே லட்ச ரூபாயாய் சற்றும் குறையாமல். கிடைக்கும்.
இரண்டாம் நபருக்கு லட்ச ரூபாய்க்கு பதிலாக, உடன் 3 லட்சம் சேர்த்து, 4 லட்சம் கொடுப்பார்கள். காரணம், இரண்டாவது நபர் அந்த லட்ச ரூபாய் பணத்திற்கான வட்டியை வாங்கிக்கொள்ளவில்லை. செலவழிக்க வில்லை. அதுவும் அதே வங்கியில் தொடர்ந்து இருக்கட்டும் என்று விட்டிருக்கிறார்.
இதை ‘பவர் ஆப் காம்பவுண்டிங்' என்கிறார்கள். தாய்க் கோழியோடு சேர்ந்து அது போட்ட முட்டைகளும் குஞ்சு பொரித்து, எல்லாம் வளர்ந்து கூட்டமாக நிற்பது போல.
பரஸ்பர நிதிகளிலும் இப்படிப்பட்ட, முதலீட்டில் இருந்து வருகிற வருமானத்தையும் அதில் மறு முதலீடு செய்கிற அணுகுமுறை உண்டு. அதன் பெயர், ' குரோத் ஆப்ஷன்'. அவ்வப்போது வாங்கிக்கொண்டுவிடுவது ‘டிவிடெண்ட் ஆப்ஷன்’.
குடியிருக்கும் வீடு, நிலம், இடம், தங்கம் வாங்குவோருக்கு அப்படிப்பட்ட, இரண்டில் ஒன்று என்ற தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம், அவற்றிலிருந்து தனியாக வருமானம் வராது. அவர்கள் போட்ட முதல் சொத்து மதிப்பு உயரும் காரணத்தினால் அதிகரித்து விடும்.
வங்கி வைப்பில் லட்ச ரூபாய் 4,00,000 ஆகியிருந்தது. லட்ச ரூபாயாக வைப்பில் போட்டதை விட அதிகம் என்றாலும், ‘16 ஆண்டுகளில் இவ்வளவுதானா?' என்று தோன்றுவது இயல்புதான். அதற்குக் காரணம் இப்போது வங்கி வட்டிகள் மிக குறைவாக இருப்பது.
நீண்ட காலம் என்பதில் வாய்ப்பு இருப்பது போல, அது சரியான அளவு வருமானம் தரக்கூடியதாக இல்லாவிட்டால் அதுவே சிக்கலாகவும் ஆகிவிடும்.
அதனால்தான் ‘ஏதாவது ஒரு முதலீடு’ என்று சொல்லாமல், ‘தேர்வு செய்த முதலீடு’ என்று சொன்னோம். தற்காலத்தில் பரஸ்பர நிதிகள் அப்படியாக ஆண்டிற்கு 12 முதல் 14 , 15 சதவீதங்கள் வரை வருமானம் தர வல்லதாக இருக்கின்றன.
தவிர, முதலீடு என்பது ஒரே முறை செய்கிற ‘லம்ப் சம்' மட்டுமல்ல. முன் பார்த்த, பெண் பிள்ளைகளைப் பெற்ற இருவரும் ஆளுக்கு ஒரு லட்சம் ஒரே ஒருமுறை செய்தார்கள். அவர்களே ஆண்டுக்கு ஒரு லட்சம் என்று செய்திருந்தால், 16 ஆண்டுகள் கழித்து அவர்கள் கோடி ரூபாயை நெருங்கி இருப்பார்கள். அதிலும் அவர்கள் அதை பரஸ்பர நிதியில் செய்திருந்தால் நிச்சயம் அந்த தொகையை எட்டுவார்கள்.
ஆக, சிக்கனமாக இருப்பது, பணத்தைச் சேமிப்பது, தொடர்ந்து நல்ல வருமானம் பெறக்கூடிய முதலீடுகளில் அதை ஈடுபடுத்துவது. அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை அவ்வப்போது எடுத்து செலவழிக்காமல், அதிக வருமானம் தரும் அதே முதலீடுகளில் தொடர விடுவது.
கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு மட்டையாளர் வெகு நேரம் நின்று ஆடினால், ஒரு நல்ல ‘ஸ்கோர்' சாத்தியம் என்பார்கள். அரை மணி நேரம் அடித்துக்கொண்டு ஊற்றி, கால்வாய் வழியாக கழிவுநீராகப் போகிற மழை நீரை காட்டிலும், தூறலாக சாரலாக இருந்தாலும் அது தொடர்ந்து ஒன்று இரண்டு நாட்கள் பெய்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பயன்தரும் என்பார்கள். பொது வாழ்வில் நெடுநாள் நின்று பணியாற்றியவர்களை ஆழங்கால் பட்டவர்கள் என்பார்கள். அவர்களது அனுபவம் பேசும். மதிப்பு பெற்று தரும்.
முதலீடுகளும் அப்படியே. நல்ல முதலீடுகளில் அவ்வப்போது காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு அச்சப்பட்டு மாற்றி விடாமல் தொடர்வது.
தூங்குக, தூங்கிச் செயற்பால; தூங்கற்க,
தூங்காது செய்யும் வினை
என்று திருவள்ளுவர் சொன்னதை, முதலீ்டுகளுக்கும் பொருத்திப் பார்த்தால், பொறுமை என்பது முதலீட்டிற்கும் தேவை என்பது புரியும்.