கலைஞரோடு எனது நடைப்பயிற்சி அனுபவங்கள்

கலைஞர் உடன் பேராசிரியர் மு. நாகநாதன்
கலைஞர் உடன் பேராசிரியர் மு. நாகநாதன்
Published on

கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். 1980களில் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து போது கடற்கரைக்குச் சென்று நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் தொடங்கியது. உடற்பயிற்சியில் நடைப்பயிற்சி முதன்மையானது. நடைப்பயிற்சிதான் உடற்பயிற்சிகளின் அரசன் (Walking is the king of exercise) என்று பலர் குறிப்பிடுவதை உணரும் வாய்ப்பையும் நான் பெற்றேன்.

உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நடைபயிற்சி பல பலன்களை அளிக்கிறது என்பது நான் கண்ட உண்மை. காலை நடைப் பயிற்சியின் போது பல அரிய நண்பர்களும் எனக்கு கிடைத்தார்கள். காலை நேர உரையாடலில் பல கருத்துப் பரிமாற்றங்கள் செய்தது எனது பட்டறிவைப் பட்டை தீட்டியது.

1988ஆம் ஆண்டிற்குப் பிறகு தேனாம்பேட்டைக்கு குடிபெயர்ந்தேன். 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் தலைவர் கலைஞர் தொடர்நது மாலை நேரங்களில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் வழக்கமாக சென்று அமர்ந்து நண்பர்களோடு உரையாடுவார். பலர் அவரைச் சந்திக்கவே அச்சப்பட்ட காலத்தில், நான் நாள்தோறும் மாலை நேரத்தில் பல்கலைக்கழகப் பணி முடித்து கடற்கரைக்கு சென்று கலைஞரைச் சந்திப்பதை வழக்கமாகச் கொண்டிருந்தேன். நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பு தொடர்ந்தது. வாரம் ஒரு முறையாவது கலைஞரோடு நான் இருப்பதை அவர் விரும்புவார். இச்சூழலில், ஒரு நாள்  கலைஞரிடம் நான் அறிவாலயத்தின் அருகே அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குடிபெயர்ந்து விட்டேன் என்றேன்.

அப்போது அறிவாலயக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். கலைஞர் இனிமேல்  அறிவாலயப் பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள நான் வரவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார். 1988இல் தொடங்கிய நடைப்பயிற்சி பயணம்  2009ஆம்  ஆண்டு வரை தொடர்ந்தது.

கலைஞரோடு 21 ஆண்டுகள் நடைப்பயிற்சி  மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு காலம் வழங்கிய கொடையாகவே கருதுகிறேன்.  பன்முக ஆற்றல் பெற்ற ஓர் அரசியல் ஆளுமை எவ்வாறு சிந்திக்கிறார்? எவ்வாறு கட்டுரைகளை எழுதுகிறார்? எவ்வாறு திரைக்கதைகளை எழுதுகிறார்? எத்தகைய உலக அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்குகிறார்?  எவ்வாறு அரசியல் அறைகூவல்களைச் சந்திக்கிறார் போன்ற பல கேள்விகளுக்கு கலைஞரோடு நான் மேற்கொண்ட நடைப்பயிற்சியின் வழியாக விடைகளைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

கலைஞர்  ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.30 மணி தொடங்கி 5.30 மணிக்குள் அறிவாலயப் பகுதிக்கு வருவார்.  40 நிமிடங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வார். கலைஞருடன் நானும், அறிவாலய பாதுகாவலர் பணியில் இருந்த நண்பர் சிவபூஷணமும் நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அரசியல், இலக்கியம் தொடங்கி அன்றாட செய்திகள் பற்றிய பல கருத்துகளை கலைஞர் விவாதிப்பார். இடையிடையே சில அரிய தகல்களையும் அளிப்பார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களுடன்  கலைஞர் பணியாற்றிய காலங்கள், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் போன்ற திரையுலக ஆளுமைகளுடன் நடந்த கருத்துப் பரிமாற்றங்களைப் பற்றியும் குறிப்பிடுவார். புதிய தகவல்கள் எங்கிருந்தாலும், எவர் கூறினாலும் அவற்றை ஆய்ந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கலைஞரிடம் இருந்தது. இதுபோன்ற அரிய நிகழ்வுகளை அவர்கூறும் போது தமிழ்நாட்டின் வரலாற்றை அறிகின்ற  வாய்ப்பாக கருதி நான் மகிழ்ச்சி அடைவேன். இது நடைப்பயிற்சி மட்டுமல்ல. ஓர் இலக்கியப் பயிற்சி. ஓர் அரசியல் பயிற்சி. ஓர் அறிவுப் பயிற்சி என்றே இன்றும் நான் உணருகிறேன்.

நடைப்பயிற்சி தொடர்ந்த காலத்தில், சில நாட்களில்  எழுத்துலக, ஊடக ஆளுமைகளும், அரசியல் நண்பர்களும் உடன் வருவதுண்டு. 1988ஆம் ஆண்டு ஒரு நாள் எழுத்தாளர் ஆனந்தவிகடன் மணியன் காலை 5.30 மணிக்கு வந்தார். அவர் கலைஞரோடு பேசத் தொடங்கியவுடன் நான் பின்னால் நின்று விட்டேன். கலைஞர் என்னை அழைத்து  எழுத்தாளர் மணியனிடம் அறிமுகம் செய்து பேச்சினைத் தொடர்ந்தார். “காஞ்சி ஜெயேந்திரருக்கு பிறந்தநாள் வருகிறது. நீங்கள் அவருக்கு உங்கள் கைப்பட வாழ்த்து ஒன்றினை அளித்தால் நன்றாக இருக்கும். 1989ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலின் போது சங்கராச்சாரியாரின் ஆதரவாளர்கள் குறிப்பாக பிராமணர்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள். உங்களுக்கும் காஞ்சி ஜெயேந்திரருக்கும் உள்ள கசப்புணர்ச்சி மறைந்துவிடும்” என்று கூறினார்.  அப்போது எழுத்தாளர் மணியனிடம் கலைஞர் கூறியது என்றும் நினைவுக்கூரத் தக்கதாகும்.  “நான் தந்தைப் பெரியாரால் உருவாக்கப்பட்டவன். அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டவன். அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்திலேயே வாழ்ந்தும், சங்காராச்சாரியார் நடந்து செல்வதை அண்ணா பார்த்தும் ஒரு முறைகூட மூத்த சங்கராச்சாரியாரைக் கூட நேரில் சந்தித்தது இல்லை. சந்திக்கவும் விரும்பியது இல்லை. திராவிட இயக்கத்தின் கொள்கையை அறிந்தவர்களுக்கு ஒன்று தெளிவாகப் புரியும். எந்த தனிமனிதன் மீதும், எந்த சமூகத்தின் மீதும், பெரியாருக்கோ, அண்ணாவிற்கோ, எனக்கோ பகையுணர்ச்சியோ, கசப்புணர்ச்சியோ கிடையாது. தமிழராகப் பிறந்த அனைவரும் சமம் என்பதுதான் எங்களது கொள்கையின் அடிப்படை. நான் சங்கராச்சாரியாரை வாழ்த்தி மடல் எழுதினால், தேர்தல் அரசியலுக்காக பெரியார், அண்ணா கொள்கையை விட்டுவிட்டேன் என்று பலர் பழி கூறுவார்கள். தேர்தல் முடிவுகளைப் பற்றி அதிகம் எனக்கு அக்கறை இல்லை’’ என்று கூறினார்.  “என்னுடைய வாழ்த்துகளை சங்கராச்சாரியாருக்கு தெரிவித்துவிடுங்கள்’’ என்றும் கூறினார். 

இதே கால கட்டத்தில் எழுத்தாளர் சாவி கலைஞரோடு ஒரு நாள் நடைப்பயிற்சிக்கு வந்தார். கதை, சிறுகதை, புதுக்கவிதைகள் ஆகியன பற்றியும் வளர்ந்து வருகிற எழுத்தாளர்கள் பற்றியும்தான் உரையாடல்கள் இருந்தன. அதே நேரத்தில் சாவியிடம் அரசியல் நிகழ்வுகளையும்  கேட்டறிந்தார்.

1991இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு மறுநாள் காலை நடைப்பயிற்சிக்கு வந்தார் கலைஞர். 1989-91 ஆண்டுகளில் காவல் துறையினர் காலையில் பாதுகாப்பிற்காக வருவார்கள்.  ஆனால் மறுநாள் ஒரு பாதுகாவலர்கூட இல்லை. கலைஞர் சிரித்துக்கொண்டே இப்போது நமக்கு நாமேதான் காவல் என்று குறிப்பிட்டார். அப்போதுதான் காலையில் திமுக தொண்டரணியினர் அறிவாலயத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

 ஆட்சி இருந்தாலும், ஆட்சி அகன்றாலும் ஒரே மனநிலையில் கலைஞர் இருப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். அரசுப் பணியில் இருந்து இப்போது ஓய்வு கிடைத்து இருக்கிறது. திருக்குறள் பணி தொடங்கலாம் என்றார். 1991ஆம் ஆண்டு திருக்குறளுக்கு ஒவ்வொரு நாளும் முரசொலியில்  தெளிவுரையை எழுதிய கலைஞர் 1995ஆம் ஆண்டு 1330 குறள்களுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அக்காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் முரசொலியில் வெளிவந்த திருக்குறள் தெளிவுரையைப் படித்தாயா? என்று என்னிடம் கேட்பார். இரவு 12 மணிவரை பல திருக்குறள் உரையாசிரியர்களின் கருத்துகளைப் படித்து எனது நடையில் எளிய முறையில் வள்ளுவரின் அடிப்படைக் கருத்துகள் மாறாமல் சிறிய உரையாக எழுதி வருகிறேன் என்று கூறுவார். இன்றைக்கு கலைஞரின் திருக்குறள் தெளிவுரை நூல் பல பதிப்புகளைப் பெற்று உலகளவில் தமிழர்களின் பெரு வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

சில நேரங்களில் அறிவாலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணங்கள் நடைபெறும் நாட்களில் கடற்கரைக்கு சென்று நடப்பார்.  மழை, குளிர், பனிக் காலங்களில்கூட தவறாமல் நடைப்பயிற்சியை மேற்கொள்வார். 1995ஆம் ஆண்டு ஒரு நாள் காலை 4 மணிக்கே கடற்கரைக்குச் சென்றோம். அந்நேரத்தில் பொதுமக்கள் வெகுசிலரே இருப்பார்கள். கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு ஏழை வழிப்போக்கன், ஐயா எனக்கு உணவு வாங்க பணம் கொடுங்கள் என்று கேட்டார். இருளில்கூட அந்த மனிதரை  அடையாளம் கண்டுகொண்ட கலைஞர், பாதுகாவலரிடம் பணத்தை அந்த வழிப்போக்கருக்கு அளிக்கும்படி கூறினார். உடனடியாக நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு மகிழுந்தில் ஏறிச்சென்றார்.  “என்ன பாதியிலேயே நடையை முடித்துவிட்டீர்களே?’’ என்று கேட்டதற்கு,  “எனக்கு ஒரு சிறுகதைக்கு கரு கிடைத்துவிட்டது’’ என்று குறிப்பிட்டார். பிறகுதான், தினமணி  ஏட்டில் ஆசிரியராகப் பணியாற்றிய இராம.சம்பந்தம், தினமணி கதிர் பொங்கல் மலருக்காக ஒரு சிறுகதையைக் கேட்டிருந்தார் என்று அறிந்து கொண்டேன். கோபாலபுரத்தில் இறங்கிய கலைஞர், பல்கலைக்கழகம் செல்வதற்கு முன் 9.30 மணிக்கு இல்லத்திற்கு வருமாறு என்னிடம் குறிப்பிட்டார். அதுபோன்றே சென்றேன். அறைக்குள் நுழைந்தேன். நான் வந்தது அவருக்கு தெரியவில்லை. தலையணை மேல் எழுதும் அட்டையை வைத்துக்கொண்டு வேகமாக எழுதிக் கொண்டிருந்தார். எழுதிய ஒவ்வொரு பக்கத்தையும் பக்கத்தில் இருந்த இடத்தில் வைத்தார். 20 பக்கம் எழுதிய போது நான் சென்றேன். அரைமணி நேரத்திற்கு பிறகு 30 பக்க சிறுகதையை முடித்துவிட்டார். குளிரூட்டப்பட்ட அறையில் கலைஞருக்கு வியர்த்தது. என்னைப் பார்த்து சொன்னார். பயப்பட வேண்டாம், நான் எழுத எழுத எனக்கு வியர்க்கும் என்று கூறி அந்த 30 பக்கங்களையும் எடுத்து ஒழுங்குபடுத்தச் சொன்னார். இந்த சிறுகதையை ஒரு படி எடுத்துக்கொண்டு  தினமணி ஆசிரியரிடம் கொடுத்துவிடு என்று கூறினார். ஒரு பக்கத்தில்கூட அடித்தல், திருத்தல் கிடையாது. ஒரு சந்திப்பிழை கூட காணவில்லை. 10 மணி அளவில் தினமணி ஆசிரியர் இராம.சம்பந்தத்திடம் சென்று சிறுகதையை அளித்து, நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டேன். தினமணி ஆசிரியர் இராம.சம்பந்தம் என்ன கூறினார்?  “அறிஞர் அண்ணா ஓர் இரவில் ஒரு  திரைக்கதையை எழுதி முடித்தார். அதுதான் ஓர் இரவு திரைப்படமானது. கலைஞர் சில மணிநேரங்களில் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அரசியல் சிக்கல்களுக்கு இடையில் இதுபோன்று கவிதை, சிறுகதை, கட்டுரைகள், இலக்கிய உரையாடல்களை கலைஞர் போன்ற ஒருவர் மேலை நாடுகளில் மேற்கொண்டால் அவருக்கு அந்த நாடு நோபல் பரிசு அளித்திருக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞருடன் ஒரு நாள் என்று குமுதம் இதழ் ஒரு செய்தித் தொகுப்பினை வெளியிட்டது. இதழாளர் சாவித்திரி கண்ணன் புகைப்படங்களை எடுத்தார். அன்றும் விடியற்காலை 4.30 மணிக்கு கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையில் கலைஞர் உரையாடிக்கொண்டே நடப்பது போன்ற படங்களைத் தொகுத்து வெளியிட்டது. இது போன்றே இந்து நாளேடும் கலைஞர் நடைப்பயிற்சி படங்களை வெளியிட்டது. 2007ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் சார்பாக நீயா? நானா? புகழ் கோபி, கலைஞருடன் காலைநேர உரையாடல் என்ற ஒரு குறும்படத்தை எடுத்தார். நானும் உடன் இருக்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். கலைஞர் தான் எழுதிய புறநானூற்று வரிகளை ஏறக்குறைய 5 நிமிடம் அப்படியே நினைவில் இருந்து பேசினார். 83 வயதிலும் கலைஞருடைய நினைவாற்றல், சொல்லாற்றல், எழுத்தாற்றலுக்கு சான்று பகரும் காட்சியாகவே இந்த நிகழ்வு இன்றும் ஒளி ஊடகங்களில் உலா வருகிறது.

கலைஞருடன் 21 ஆண்டு கால நடைப்பயிற்சியில் எதைச் சொல்வது? எதை விடுவது? ஆனால் கலைஞரின் கரகரத்த குரல் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலம் நடந்து கொண்டிருக்கிறது. நானும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறேன். கலைஞர் நினைவுகளோடு...

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com